பகவத் கீதை

अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः ।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् ॥ ११ ॥

அதைததப்யசக்தோzஸி கர்த்தும் மத்யோகமாச்ரித: |
ஸர்வ கர்ம பலத்யாகம் தத: குரு யதாத்மவாந் ||          12.11

கீழ்ச் சொல்லியபடி நான் உனக்கும் (நீ எனக்குத்) தொண்டுகளைச் செய்யவும் சக்தியற்றவனாகில், விஷயங்களிலிருந்து உன் மனத்தை அடக்கி, நீ செய்யும் எல்லா கர்ம பலன்களையும் எனக்கு அர்ப்பணம் செய்.

உன் மனம் புத்தி இவைகளை நிலையாக என்னிடம் வைத்துச் செய்யும் அனன்யப் பக்தியினால் நீ என்னை அடைவாய் என்றான் முதன்முதலில்.

அப்படி அனன்ய பக்தி செய்ய இயலாதவன் என்னை தியானம் செய்ய சிறிது சிறிதாகப் பழகிக் கொண்டால், தன்னடைவே தன்னிடம் நிலையான பக்தி உண்டாகும் என்றான்.

அப்படி தியானம் அப்யாஸம் செய்யவும் சக்தியற்றவன், எனக்குப் பிரியமான கைங்கர்யங்களை, (தான் உகக்கும் பணியை) செய்து வந்தால் நாளடைவில் த்யானம் செய்யப் பழக்கம் உண்டாகி பிறகு பக்தி செய்து என்னைப் பெறலாம் என்றான்.

இதையும் செய்ய இயலாதவன், தான் செய்யும் எல்லாச் செயல்களின் பலன்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து, ஜீவாத்ம சிந்தனம் செய்யப் பழகிக் கொள்ளட்டும் என்கிறான் இந்த பதினொன்றாம் சுலோகத்தில்.

முதல் ஷட்கத்தில் சொல்லியபடி நாம் செய்யும் எல்லாச் செயல்களையும், லௌகிகமோ, சந்தி, ஜபம் போன்ற வைதீகமோ எதுவானாலும் அவைகளின் பலனில் இச்சையில்லாமல் செய்ய வேண்டும். நான் செய்கிறேன், இந்தச் செயல் என்னுடையது, இதன் பயன் எனக்கு என்று எண்ணலாகாது. பகவானே கர்த்தா, அவனால் கொடுக்கப்பட்ட ஜ்ஞான சக்தியைக் கொண்டு செய்யப் பட்டன. அவனே ஒரு சூத்ரதாரியாக நம்முள் இருந்து நடத்தி வைக்கிறான். இவைகளின் பலன்களிலும் எனக்குத் தொடர்பு இல்லை என்று எல்லா கர்ம பலன்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.

இப்படிச் செய்து வந்தால் ராஜஸ, தாமஸ குணம் அடங்கி, ஸத்வகுணம் மேலிட்டு, நாம் பரிசுத்த ஆத்மாவை சிந்தனம் செய்யத் தகுதியுள்ளவராகிறோம். ஜீவாத்ம சிந்தனம் செய்து வந்தால், ஜீவாத்ம அவலோகனம் ஸாக்ஷாத்காரம் (தரிசனம்) ஏற்படும். அப்போது ஜீவாத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி, அறிவதுடன் ஜீவன் பகவானுக்குத் தொண்டு செய்வதே ஜீவனின் ஸ்வரூபம், என்று ஈச்வரனுக்கும் ஜீவனுக்குமுள்ள ஸ்வாமி தாஸ சம்பந்தத்தை அறிந்து, பகவானுக்கு அன்புடன் தொண்டு செய்யத் தலைப்படுபவன்; பிறகு பரமாத்ம தியானம் செய்து, பகவத் பக்தி உண்டாகி, அது பரபக்தி பரஜ்ஞானம், பரமபக்தியாக முதிர்ந்து மோக்ஷம் பெறுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top