கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

பேரருளாளன் பெருந்தேவித்தாயர் திருவடிகளே சரணம்
பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்
ஜகதாசார்ய ஸிம்ஹாஸநாதிபதி மஹாமஹிபோத்யாய பெருமாள்கோவில் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் எழுதியவை.

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பகவத்கீதாஸாரஸங்க்ரஹம்    1.0

1. ஸர்வேச்வரன் உபயவிபூதிநாதனென்று கொண்டாடப்படுகிறான். லீலா விபூதியும் நித்யவிபூதியுமாகிய மண்ணுலகும் விண்ணுலகும் உபய விபூதிகளெனப் படும். “அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” என்று (திருவிருத்தத்தில்) நம்மாழ்வாரும், *பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதுஞ் சோராமே யாள்கின்றவெம்பெருமான்* என்று (நாச்சியார் திருமொழியில்) ஆண்டாளும் எம்பெருமானுடைய உபயவிபூதி நிர்வாஹகத்வத்தைப் பற்றிப் பேசின பாசுரங்கள் அறியத்தக்கன. நித்யவிபூதிக்கு எதிராயிருக்கின்ற இந்த லீலாவிபூதியை மாஞானிகள் ‘இருள் தருமாஞாலம்' என்று வழங்குகிறார்கள். இம்மண்ணுலகம் இருளே மலிந்ததென்று சொல்லப்படுகிறது. ஸூர்யன் சந்திரன் அக்னி முதலிய சுடர்ப்பொருள்களால் போக்கமுடியாத அகவிருள் [அஜ்ஞாநாந்தகாரம்] இங்கு இருளெனப்படுகிறது. "அந்தம் தம இவாஜ்ஞாநம்" என்று ஸ்ரீபராசர மஹர்ஷியும் சொல்லிவைத்தார்.

2. இப்படிப்பட்ட அகவிருளை அகற்றுவதற்காகப் பேரருளாளனான எம்பெருமான் *கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள்தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்து" என்று திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடியே ச்ருதிஸ்மிருதீதிஹாஸ புராணாதிகளான நாநா சாஸ்த்ரங்களை யுபகரித்தருளினான். அப்படி உபகரிந்தவிடத்தில் ஸத்வாரகமாகப் பல நூல்களையும் அத்வாரகமாகச் சில நூல்களையும் இவ்வுலகில் அவதரிப்பித்தருளினன். வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகளான மஹர்ஷிகளை த்வாரமாகக் கொண்டு அவர்கள் வாயிலாக வெளியிட்டவை ஸத்வாரக மெனப்படும். அப்படி யன்றிக்கே தானே ஸாக்ஷாத்தாக வெளியிட்டவை அத்வாரக மெனப்படும். இப்படிப்பட்ட அத்வாரக சாஸ்த்ரங்களுள் பகவத் கீதாசாஸ்த்ரமென்பது தலைசிறந்து விளங்குகிறது.

3. *வேதேஷு பௌருஷம் ஸூக்தம் தர்மசாஸ்த்ரேஷு மாநவம், பாரதே பகவத்கீதா புராணேஷுச வைஷ்ணவம்' வேதங்களுக்குள்ளே புருஷஸூக்தமும், தர்மசாஸ்த்ரங்களுக்குள்ளே மநுஸ்ம்ருதியும், மஹாபாரதத்திற்குள்ளே ஸ்ரீ கீதையும், புராணங்களுக்குள்ளே ஸ்ரீவிஷ்ணுபுராணமும் சிறந்தவை யென்று சொல்லிற்று. பஞ்சம வேதமாகப் புகழப் படுகின்ற மஹாபாரதத்தினுள்ளே கீதோபநிஷத்தென்று குலாவப்படுகின்ற பகவத்கீதையானது பெரும்பாலும் ஸகலமதஸ்தர்களாலும் உச்சிமேல்வைத்து மெச்சப்படுகின்ற தென்பது உலகமறிந்தது. உபநிஷத்துக்களின் அரியபெரிய பொருள்களெல்லாம் இதுதன்னில் அடங்கிக் கிடக்கின்றமையால் எப்படிப்பட்ட பண்டிதர்களுக்கும் வியாக்கியானங்களின் உதவியின்றி இதன் பொருள் அறிய முடியாததாயிருக்கும். ஆனதுபற்றியே பலபல மஹான்களும் மஹாசார்யர்களும் மேதாவிகளும் இதற்கு அனேக வியாக்கியானங்கள் இயற்றி யுள்ளார்கள். மூலத்தின்மேல் ப்ரதிபத வியாக்கியானமாகவும் பொழிப்புரையாகவும், கருத்துரையாகவும், உபந்யாஸ ரூபமாகவும், ஆராய்ச்சி யுருவமாகவும் மற்றும் பலவிதமாகவும் கீதைக்கு அமைந்திருக்கின்ற விவரணங்கள் எண்ணுதற்கரியன. இவை இரண்டொரு பாஷைகளிலல்ல; ஐந்தாறு பாஷைகளிலுமல்ல; உலகில் எத் தனை பாஷைகள் நடையாடுகின்றனவோ, அத்தனை பாஷைசுளிலும் தோன்றியுள்ளது. இது கொண்டே இதன் ஒப்புயர்வற்ற மஹிமை அறியற் பாலது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top