பகவத் கீதை


अनादिमध्यान्तमनन्तवीर्यमनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वा दीप्तहुताशवक्त्रम् स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥ १९ ॥

அநாதிமத்யாந்தம் அநந்தவீர்யம் அநந்தபாஹும் சசிஸூர்யநேத்ரம் |
பச்யாமி த்வா தீப்தஹுதாசவக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்வமிதம் தபந்தம் ||     11.19

ஆதி நடு இறுதி இல்லாதவரும், அளவில்லா ஞானம், சக்தி, வீர்ய, பலம், ஐச்வர்யம், தேஜஸ் முதலான குணங்கள் உள்ளவரும், கணக்கில்லாத பல முகங்கள், கண்கள், கைகள், கால்கள் உடையவரும், சந்திர சூரியர்களைக் கண்களாக உடையவரும், வெந்தழல் வாய் படைத்தவரும், உமது தேஜஸ்ஸினால் உலகம் யாவையையும் எரிக்கின்றவர் போல் உள்ள உம்மை நான் காண்கிறேன்.

இப்படி, உலகுக்கெல்லாம் படைத்தல் காத்தல் அழித்தல் இவைகளுக்குக் காரணமாய், எல்லா உயிர்களிலும் ஆத்மாவாக யிருந்து, அவைகளை தரித்து நியமித்து நடத்தும் ஜ்ஞான சக்தி முதலிய கல்யாண குணங்கள் நிறைந்தவராய், ஆதி, மத்யம், அந்தம் இல்லாத உம் திவ்ய மங்கள ஸ்வருபத்தை நீர் உபதேசம் செய்தபடி நான் இப்போது காண்கிறேன்.

கீழ் 16ம் சுலோகத்தில் அவன் உடலின் முதல், நடு, இறுதியைக் காணவில்லை என்பதைச் சொன்னான். இதில் பகவானுடைய ஆத்ம ஸ்வருபத்தின், ஞான சக்தியாதி குணங்களுக்கும், ஆதி நடு இறுதி காணப்படவில்லை என்பதைச் சொல்கிறான். “வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்” என்கிறது ச்ருதியும்.

ஜீவனின் ரூப ஸ்வரூபங்கள் (உடலும் உயிரும்) ஒரே இடத்தில் உள்ளவை. ஆனால் ஸர்வேச்வரனுடைய உடலும், ஆத்ம ஸ்வரூபமும் எங்கும் பரந்துள்ளது என்பதையே இந்த இரண்டு சுலோகங்களில் சொல்லப்படுகிறது. இதுவே பகவானுக்குள்ள தனிச்சிறப்பு.

இன்னும் சுத்த ஸத்வம், ப்ரக்ருதி, காலம் என மூன்று தத்வங்கள் உள்ளன. இவைகளில் சுத்த ஸத்வம் பரமபதத்தில் தான் உண்டு. இவ்வுலகில் இல்லை. விரஜாநதியில் ஸ்நானம் செய்து பரமபதம் சென்ற பிறகுதான், ஜீவாத்மா சுத்த ஸத்வ மயமான சரீரத்தையும் குணங்களையும் பெறுகிறான். ப்ரக்ருதி இவ்வுலகில் தான் உண்டு: பரமபதத்தில் ப்ரக்ருதி கிடையாது. காலம் என்பது இங்கும் பரமபதத்திலும் உண்டு. “ஸதா பச்யந்தி ஸூரய” எப்போதும் நித்யசூரிகள் பகவானை ஸேவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் என்பதினால் காலம் அங்கும் உண்டு என்பது தேறுகிறது. ஆனால் அங்கு காலத்திற்கு ஆதிக்கமில்லை. இந்த பூமியில் தான் காலத்திற்கு ஆதிக்கம் உண்டு. காலம் ஸாம்ராஜ்யம் செய்யும் தேசம் இது. பகவானே இங்கு ராமனாக அவதரித்திருந்தாலும் முதல் நாள் ராஜ்யம் பெற்ற அவனுக்கு மறுநாள் ராஜ்யமில்லை; காடேற வேண்டியதாயிற்று. அவனும் காலத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும். பிரியக்கூடாத சீதையைப் பிரிய வேண்டியிருந்தது காலத்தின் கூற்று.

அநாதிர் பகவான் கால என்பது பராசரரின் வாக்யம். காலத்திற்கு ஆதியுமில்லை; அந்தமுமில்லை; அந்தக் காலத்தை சரீரமாக உடையவன் பகவான். இதை நேரில் கண்ட அர்ஜுனன் நீர் முக்காலத்திலும் இருப்பவர் என்கிறான்.

மஹாத்மாவே! வானத்திற்கும் மண்ணுக்கும் இடையிலுள்ள பெருவெளி உம்மால் நிரம்பப் பெற்றிருக்கிறது. மற்ற எல்லாத் திசைகளும் அவ்வாறே உள்ளன. ஆச்சர்யமான உன் இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூவுலகம் பயந்து நடுங்குகின்றன.

நீக்கமற எங்கும் நிறைந்தவன் இறைவன் என்பதை அர்ஜூனன் இங்கு நேரில் காண்கிறான். புகவானிடம் இனிமையும் உண்டு.

இது அவரவர் மனோ நிலைக்குச்சேர அனுபவிக்கலாயிருக்கும். போரைக் காண ஆகாயத்தில் கூடியுள்ள தேவர்கள் முதலானோர் அவனுடைய பயங்கர ரூபத்தைக்கண்டு நடுங்குகிறார்கள்.

ஏகேன என்பதினால் கை கால் மற்ற அவயவங்கள் பலவாயிருந்தாலும், அந்த உடல் ஒன்றேயாம் என்பதைக் குறிக்கும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top