பகவத் கீதை

यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥ १५.१८ ॥

யஸ்மாத் க்ஷரமத்தோஹம் அக்ஷராதபிச உத்தம: |
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம: ||          15.18

லோகத்தில் க்ஷரன் என்றும் ஆக்ஷரன் என்றும் இருவகை புருஷர்கள் (ஜீவாத்மாக்கள்) இருக்கிறார்கள். ஸம்ஸார பந்தத்திலிருப்பவன் க்ஷரன் என்றும், ஸ்ம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்ட முக்தன் அக்ஷரன் என்றும் சொல்லப்படுகிறான்.

இவ்விரு ஜீவாத்மாக்களைக் காட்டிலும் வேறுபட்டவனாய் உயர்ந்தவனாயுள்ள புருஷன் புருஷோத்தமன் எனப்படுபவன். இவன் மாறுதல் இல்லாதவன், நித்யன்; அசித்து மற்றும் பத்தன், முக்தன், நித்யன் என மூவகை ஆத்மாக்களிலும் நுழைந்து அவைகளை நியமித்து (ஏவி), தரித்துப் போருகிறவன்.

பக்த முக்த நித்யர்களைக் காட்டிலும் நான் மேன்பட்டவனாகை யினால், வேதங்களும், ஸ்மிருதிகளும் என்னை புருஷோத்தமன் என்று கொண்டாடுகின்றன என்கிறான் கண்ணன்.

பகவான் நாராயணன் ஒருவனுக்கே புருஷோத்தமன் என்கிற திருநாமம் உண்டு. புருஷோத்தமனான கண்ணனே இந்த மூன்று சுலோகத்தில் புருஷோத்தமன் என்கிற திருநாமத்திற்குப் பொருள் கூறியிருக்கிறான்.

புருஷேப்யோ உத்தம: புருஷானாம் உத்தம: புருஷேஷு உத்தம: என்று மூன்று வகையில் பொருள் கூறலாம்.

ப்ரஹ்மா முதல் ஈ எறும்பு வரையில் உள்ள உயிர்கள் க்ஷரம் எனப்படும். ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைந்த முக்தர்கள் அக்ஷரம் எனப்படுவர். இவ்விருவகை ஆத்மாக்களைக் காட்டிலும் வேறுபட்டவனாய் விளங்குகிறான் பகவான்; இவைகளில் பிரவேசித்து, இவைகளை தரித்து, நியமித்து போருகிறவன் பகவான்; ஆதலால் புருஷோத்தமன் எனப்படுகிறான்.

புருஷ: என்றால் அறிவுடையவன்; அறிவில்லாத அசித்தைக் காட்டிலும் வேறுபட்டவன் என்பதும் இதனால் தேறுகிறது.

உத்புருஷ: சரீரம் பெற்றிருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும் மேற்பட்டவன்.

உத்தரபுருஷ: சிறிது காலம் ஸம்ஸாரத்திலிருந்து பகவானின் அருளினாலே ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷமடைந்த முக்தாத்மாவைக் காட்டிலும் மேம்பட்டவன்.

உத்தம புருஷ: ஒரு நாளும் ஸம்ஸார ஸம்பந்தமேயில்லாத நித்ய சூரிகளைக் காட்டிலும் உயர்ந்தவன்.

புருஷோத்தம: அறிவில்லாத அசித்து, அறிவுள்ள பத்த ஜீவன், முக்தாத்மா, நித்யசூரிகள் இவர்கள் எல்லோரைக் காட்டிலும் வேறுபட்டு சிறப்புடையவனாய் விளங்கிக் கொண்டிருக்கும் பகவான் ஆதலால் புருஷோத்தமன்.

புரு-- கரோதீதி- என்பது புருஷோத்தம பதத்திற்கு தாது (Root word) வேண்டிற்றெல்லாம் கொடுப்பவன் பகவான் என்பது இதிலிருந்து கிடைக்கும் பொருள் "ஸகல பல ப்ரதாதா" ஸர்வேச்வரன். வேண்டிற்றெல்லாம் தரும் கற்பகம் 'சதுர்நாம் புருஷார்த்தானாம். தாதா புருஷோத்தம: ஹரி:”, தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்கிற நான்கு புருஷார்த்தங்களைத் தருபவன்; ஆதலால் புருஷோத்தமன் எனப்படுகிறான். பகவான் யார் யார் எதை விரும்பி அவனைப் பற்றுகிறார்களோ, அதையெல்லாம் வெகுவாக வழங்குபவன்.

இதை ஸ்ரீ ராமாவதாரத்தில் நன்கு காணலாம். ரீஷிகளுக்குத் தர்மத்தையும், விபீஷணனுக்கு அர்த்தத்தையும், (ராஜ்யத்தையும்), சுக்ரீவனுக்கு காமத்தையும், ஜடாயு, சரபங்கர், சபரி, வாலி இவர்களுக்கு மோக்ஷத்தையும், அருளியிருக்கிறான். தமஸ: பரமோதாதா என்று அவனை மண்டோதரி கொண்டாடிப் பேசியிருக்கிறாள். இந்த நான்கு புருஷாத்தங்களைத் தவிர, கைவல்யம் (தன் ஆத்மாவையே தான் அனுபத்திருப்பது) என்ற ஒரு பலன் இருக்கிறது; தன்னைத் தானே பார்த்திருப்பதான அந்தப் பலனை எனக்குத் தந்தாய் என்கிறாள் மண்டோதரி.

இப்படி பகவானை புருஷோத்தமன் என்று தெரிந்து கொள்பவர் பெறும் பேற்றை மேலே சொல்லுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top