கீதார்த்தசங்க்ரஹம் ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம் 10. மேலே ப்ரஸ்தாவித்த இரண்டு விஷயங்களுள் முந்தின விஷயத்திற்கு முன்னம் ஸமாதானம் தெரிவிக்கின்றோம். பசுவான் ஸ்ரீ ராமாவதாரஞ்செய்து *தச வர்ஷஸஹஸ்ராணி தச வர்ஷசதாநிச, ராமோ ராஜ்யமுபாஸித்வா* என்றபடி பதினோராயிரமாண்டு இந்நிலவுலகில் வாழ்ந்திருந்தும் ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவ நார்த்தமாக ஒரு சாஸ்த்ரமும் இட்டருளவில்லை; தன்னடிச் சோதிக்கு எழுந்தருளின பிறகு திருவுள்ளத்தில் இக்குறை மிகவும் தோன்றிற்று. அப்போதே திடமாக ஸங்கல்பம் செய்து கொண்டான்-அடுத்தபடி மண்ணுலகில் அவதாரம் செய்யும்போது மிகச் சிறந்ததொரு சாஸ்த்ரத்தை அவதரிப்பித்தே தீருவேனென்று. சாஸ்த்ரத்தை அவதரிப்பித்தலென்றால் ஓலைப்புறத்திலே எழுதிவைப்பதன்று. அப்படியெழுதி வைப்பதில் ரஸமில்லை. ஒரு உத்தமாதிகாரிக்குத் தன் திருவாக்காலே நேராக உபதேசித்து அம்முகத்தாலே உலகில் பரவ வைக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி யிருந்தான். 11. ஸ்ரீவசநபூஷணத்தில் "ஜிதேந்த்ரியரில் தலைவனாய் ஆஸ்திகாக்ரேஸரனாய் *கேசவஸ்யாத்மாவென்று க்ருஷ்ணனுக்கு தாரகனாயிருக்கிற அர்ஜுநனுக்கு" என்று பிள்ளை லோகாசார்யர் புகழும்படியான பெருமைவாய்ந்த அர்ஜுனனையே உபதேச ஸத்பாத்ரமாகத் திருவுள்ளம் பற்றினான் கண்ணபிரான். அரும்பெரும் பொருள்களை சிஷ்யனானவனுக்கு உபதேசிக்கலாமே யல்லது மற்றையோர்க்கு உபதேசிக்கத் தகாது. அர்ஜுனன் இப்போது நண்பனென்னும் முறையிலுள்ளானே யன்றி சிஷ்யனென்னும் முறையிலில்லை. "அதிபரிசயாதவஜ்ஞா ஸந்ததகமநாத் அநாதரோ பவதி, மலயே பில்லபுரந்த்ரீ சந்தநதருகாஷ்டமிந்தநம் குருதே.” என்று ஒரு ஸுபாஷிதமுண்டே. மலயபர்வதத்தில் வாழும் குறத்திகள் சந்தனக் கட்டைகளை விறகாக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்களாம். எதனாலே? அவ்விடத்தில் சந்தனகாஷ்டங்கள் மலிந்துகிடக்கின்றன. அவற்றோடே அவர்களுக்குப் பரிசயம் அதிகம், அதிக பரிசயமுள்ளவிடத்தில் அவஜ்ஞை தோன்றுவது இயல்வு. ஆகவே அவர்கள் சந்தனக்கட்டைகளின் பெருமையை யுணராமல் அவற்றை யிட்டுச் சமையல் செய்வதும் குளிர் காய்வதுமாயிருக்கிறார்கள். அதுபோல, கண்ணன் பக்கலில் அதிக பரிசயமுள்ள அர்ஜுனனுக்கு சிஷ்யத்வமிருக்க ப்ரஸக்தியில்லையன்றோ. சிஷ்ய வ்ருத்தி செய்யாதவனுக்கு உபதேசிக்கக் கூடாதாதலால் இவ்வர்ஜுனனை எப்படியாவது சிஷ்யனாக்கிக்கொண்டு இவனுக்கே கீதாசாஸ்த்ரத்தை யுபதேசிக்கவேணு மென்று திருவுள்ளம் பற்றினான் கண்ணபிரான். 12. "கண்ணபிரானே ! உனக்கு நான் சிஷ்யனாயிருக்கின்றேன், எனக்குத் தத்வோபதேசம் செய்தருளவேணும்” என்று பிரார்த்திக்கும் படியாக அர்ஜுநனைச் செய்து பிறகு அவனுக்கு உபதேசிக்கவேணும். சிஷ்யத்வமென்பது எளிதாக உண் டாய்விடுமோ? "பரீக்ஷ்ய லோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத்... ..தத்விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்..." இத்யாதி யுபநிஷத்தின்படி நிர்வேதமுண்டானாலல்லது சிஷ்யத்வ முண்டாக மாட்டா தாகையாலே அர்ஜுனனுக்கு சிஷ்யத்வ ப்ராப்திக்கு அங்கமாக நிர்வேதமுண்டாகவேண்டியது அவசியமாயிற்று. அந்த நிர்வேதத்தை யுண்டாக்குவதற்கு ஸமயமெதிர்பார்த்திருக்கிறான் கண்ணபிரான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0