13. இப்பெருமான் ஸந்தி பண்ணிவைப்பதாகப் புகுந்து, முடிவில் போர் செய்வதையே திடப்படுத்திக்கொண்டு, ஸமயத்தில் கீதாசாஸ்த்ரத்தை யுபதேசிக்க இடம் பெறுவதற்காக அர்ஜுநனோடு ஸாமாநாதிகரண்யம் [சேர்த்தி] ஸித்திக்கும் பொருட்டு இவனுடைய தேரில் இருப்புப் பெறுவதற்குத் தேர்ப் பாகனாயிருக்க இசைந்து அவனோடும் அவனுடையாரோடுங்கூட குருக்ஷேத்திரம் வந்து சேர்ந்து, யுத்தத்தைத் தொடங்குவதற்கு முன்னே பந்துக்களைக் கண்டு மோஹிப்பதென்ன: அதனால் சோக விஷாதங்களை யடைவதென்ன ஆகிய இவற்றை யுண்டாக்கி, ஆக இவ்வளவால் சிஷ்யத்வத்திற்கு அங்கமான நிர்வேதத்தை யுண்டாக்குவதாகத் திருவுள்ளம்பற்றி, மேலே பத்தாவது அத்யாயத்தில் *அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே* என்று தானே யருளிச்செய்கிறபடியே தனக்கு அஸாதாரணமாக விருக்கும் சக்தியினால்-இப்போது போர்புரிய வந்து நிற்கும் உற்றாருறவினர்களைப் பார்க்கவேணு மென்பதோராசையை அர்ஜுனனுக்கு உண்டு பண்ணினானாயிற்று.
14. இரண்டாமத்யாயத்தில் பதினோராவது ச்லோகமாகிய "அசோச்யாந் அந்வசோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ச்ச பாஷஸே, சுதாஸூந் அகதாஸூம்ச்ச நாநுசோசந்தி பண்டிதா: ” என்கிற ச்லோகந்தான் உபதேசத்தின் உபக்ரமமாக வுள்ளது. இதற்கு முன்னே அர்ஜுனன் வாயில் "சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்தம்" என்று வெளிவந்திருக்கிறது. 'கண்ணா! எனக்கு தர்மாதர்மங்கள் தெரியவில்லை; எனக்கு ச்ரேயஸ்ஸென்று நீ அறுதியிட்ட பொருளை எனக்கு உரைப்பாயாக. உனக்கு நான் மித்திரன் மாத்திரமல்லேன்; சிஷ்யனுமாகிறேன்; இதோ உன் திருவடிகளில் வீழ்ந்து யாசிக்கிறேன் காண்; எனக்கு ஹிதாஹிதங்களை யுபதேசிப்பாயாக' என்று அர்ஜுநன் சொல்லும்படி செய்துவிட்டான் கண்ண பிரான். இந்த ப்ரார்த்தனையைப் பெறாமல் சிறந்த சாஸ்த்ரத்தை யுபதேசிப்பது தகுதியன்றாதலாலும், நிர்வேத மில்லாதவனது வாயில் இந்த பிரார்த்தனை வெளி வராதாகையாலும் இத்தனையும் கண்ணபிரான் செய்துவைத்த வொரு நாடகம் என்பது அறியத்தக்கது. ஆகவே அர்ஜுனனுக்குண்டான வ்யாமோஹம் அவன் றன்னுடைய ஸ்வபாவத்தாலுண்டானதன்று, மாயப் போர்த் தேர்ப்பாகனுடைய மாயமந்திரம் செய்வித்த செயல் என்றதாயிற்று. இல்லையாகில் கீதாசாஸ்த்ரம் அவதரிக்க அவகாசமே யிராதன்றோ.
15. போர்புரிய மாட்டேனென்ற அர்ஜுனனைப் போரில் மூட்டுவதற்கு இந்த கீதாசாஸ்த்ரத்தில் சொல்லப்படுகிற விஷயங்களித்தனையும் வேணுமோ? க்ஷத்ரிய தர்மோபதேச மொன்று போதுமே; ப்ரக்ருதத்திற்கு அநபேக்ஷிதங்களான அதிகவிஷயங்களை இதில் பரக்கக்கூறி யிருப்பது என்? என்கிற இரண்டாவதான ஆலோசனைக்கு இனிச் சொல்லுகிறோம். ஏதோ வொரு வியாஜத்தை யிட்டு அரிய பெரிய சாஸ்த்ரார்த்தங்களை வெளியிடவேணுமென்று துணிந்த கண்ணபிரானது திருவாக்கில் இது ஆவச்யகம், இது அநாவச்யகம் என்று வரையறுக்க நாமார்? விஷயங்களானவை ப்ரஸக்தம் அநுப்ரஸக்தம் என்று இருவகைப்படுமன்றோ? எந்த சாஸ்த்ரமும் ப்ரஸக்த விஷயங்களோடு மட்டும் நிற்காது. அநுப்ரஸக்த விஷயங்களும் சேர்ந்தே நிற்கும். ஸ்வாமி எம்பெருமானார் தம்முடைய கீதாபாஷ்ய அவதாரிகையின் முடிவில் “பாண்டுதநய யுத்தப்ரோத்ஸாஹநவ்யாஜேந பரமபுருஷார்த்த லக்ஷணமோக்ஷஸாதநதயா வேதாந்தோ திதம் ஸ்வவிஷயம் ஜ்ஞாநகர்மாநுக்ருஹீதம் பக்தியோகமவதாரயாமாஸ” என்றருளிச் செய்துள்ள ஸ்ரீ ஸுக்திகளை இங்கே அநுஸந்திப்பது. அர்ஜுநனை யுத்தத்தில் உத்ஸாஹப்படுத்துவது என்பது வ்யாஜமாத்ர மென்றும், பரமபுருஷார்த்தமான மோக்ஷத்திற்கு ஸாதனமாக வேதாந்தங்களில் ஓதப்பட்டதாய் ஜ்ஞானகர்மங்களை அங்கமாக வுடைத்தாயிருந்துள்ள பக்தி யோகத்தை அவதரிப்பிப்பதுதான் இந்த கீதாசாஸ்த்ரத்திற்கு ப்ரதாந லக்ஷ்ய மென்றும் தெரிவித்தருளினாராயிற்று. ஆகவே முமுக்ஷுக்களுக்கு ஜ்ஞாதவ்யங்களான ஸகலார்த்த ஸாரங்களும் இந்த கீதாசாஸ்த்ரத்தில் தெள்ளமுதாக அமைந்துள்ளன வென்றதாயிற்று.