கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

49. இனி, பத்து பதினொன்று ஆகிய இரண்டத்யாயங்களின் ஸாரங்களைச் சேர்த்து அநுபவிப்போம். பத்தாவது அத்யாயத்திற்கு விபூத்யத்யாயமென்று பெயர்; பதினோராமத்யாயத்திற்கு விச்வரூபாத்யாய மென்று பெயர்; பத்தா மத்யாயத்திற்கு ஸ்வாமி யெம்பெருமானாருடைய அவதாரிகை வருமாறு:- கீழே பக்தியோகம் ஸாங்கமாக விவரித்துரைக்கப்பட்டது; இப்பொழுது. பக்தியுண்டாவதற்காகவும் அது வளருவதற்காகவும் எம்பெருமானுடைய [தன்னுடைய] நிகறற்ற ஐச்வர்யம் முதலிய திருக்கல்யாண குணங்களின் திரள் அளவு கடந்திருக்கிறபடியையும், உலகமெல்லாம் தனக்கு சரீரமாயிருக்கையாலே அவனுருவாய் அவன் ஏவச்செல்லும்படியாயிருக்கின் றமையும் விஸ்தரித்துச் சொல்லப்படுகின்றன-என்று. இடையிடையில் அர்ஜுநன் கேள்வி கேட்டால் அதற்குமேல் கண்ணன் விடை கூறுவது என்கிற முறையை இவ்விடத்தில் வைத்துக்கொள்ளாமல் தானாகவே “பூய ஏவ மஹாபாஹோ! ச்ருணு மே பரமம் வச: ” (10-1) என்று, மீண்டும் நான் சொல்லுவதைக் கேளப்பா! என்று ஆரம்பித்துச் சொல்லுகிறான்; இப்படி அப்ருஷ்டோத்தரமாகச் சொல்லுவது கூடுமோ வென்று சங்கிக்க இடமில்லாதபடி உத்தரார்த்தத்தில் “யத் தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா” என்று, ச்ரோதாவான அர்ஜுநனுடைய முகத்தில் ப்ரீதி விசேஷத்தைக்கண்டு இவனுக்கு இன்னமும் விரிவாகச் சொல்லியே யாகவேண்டு மென்று திருவுள்ளம்பற்றிச் சொல்லுவதாகக் காட்டப்படுகிறது. விஷயம் கேட்கிறவன் சிறிது வெறுப்போடிருப்பதாகத் தெரிய வந்தாலும் வக்தாவுக்கு மேன்மேலும் சொல்ல வாயெழும்பாது; ச்ரோதா ப்ரஸந்த முகனாகத் தென்பட்டால் அபூர்வமான விஷயங்களும் 'என்னைக்கொள் என்னைக் கொள்' என்று முற்பட்டு நினைவுக்கு வந்து நிற்கும். அவற்றை யெல்லாம் சொல்லியே தீரவேண்டியதாகும். இங்கு 10, 11 ஆகிய இரண்டத்யாயங்களிலும் சொல்லப்புகுகிற விஷயங்கள் கீதா சாஸ்த்ரத்தினுள் ஸாரங்களாயிருப்பதால் இவற்றைச் சொல்லத் தொடங்கும்போதே அர்ஜுநன் தன்னுடைய அவாவை அதிகமாகக் காட்டினானென்பது “ப்ரீயமாணாய தே" என்பதனால் விளக்கப்படுகிறது. அவன் ப்ரீதனாகத் தென்படாமற் போனாலுங்கூட அவனுடைய ஹிதத்தை யுத்தேசித்துத் தான் சொல்லியே தீரப்போகிறதாகக் காட்டப்படுகிறது "வக்ஷ்யாமி ஹிநகாம்யயா" என்பதனால். ஆக இவ்விரண்டத்யாயங்களிலும் தெரிவிக்கப்படுகிற அர்த்தங்கள் ப்ரியங்களுமாய் ஹிதங்களுமாயிருக்குமென்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டதாயிற்று. (10–19) "ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநச் சுபா: , ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட! நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே.” என்று, அர்ஜுநா! என்னுடைய மிகவழகிய விபூதிகளை உனக்குச் சொல்லுகிறேன்; எல்லாவற்றையும் சொல்லுவதென்றால் அவற்றுக்கு முடிவே கிடையாமையாலே சொல்லப் போகாது; உன்னால் கேட்கவும் போகாது; ஆகையாலே முக்கியமாகச் சிலவற்றைச் சொல்லுகிறேன் கேளாய் என்று சொல்லி, (21) "ஆதித்யாநாமஹம் விஷ்ணு:” என்று தொடங்கி முப்பத்தொன்பதாவது ச்லோகமளவும் சொன்னான். இவையெல்லாம் கேட்ட அர்ஜுநன் (11–1ல்) "யத் த்வயோக்தம் வசஸ் தேந மோஹோயம் விகதோ மம” என்று, கண்ணா! நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு என்னுடைய மோஹ மெல்லாம் தொலைந்தது என்று சொல்லி, (11-3ல்) "த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைச்வரம் புருஷோத்தம” என்று பகவானுடைய அஸாதாரண ரூபத்தைக் காண்பதிலே தனக்கு விருப்பமிருப்பதாக வெளியிட்டான். அவனுக்குக் கண்ணபிரான் விச்வரூபம் காட்டியருளத் திருவுள்ளம்பற்றி அதை ஊனக்கண்ணாலே காண முடியா தாகையால் அது காண்கைக்காக திவ்ய சக்ஷுஸ்ஸைக் கொடுத்தருள விரும்பி "திவ்யம் ததாமி தே சக்ஷு: பச்யே மே யோகமைச்வரம்” என்று சொல்லி திவ்ய சக்ஷுஸ்ஸைக் கொடுத்து விச்வரூபத்தை அற்புதமாகக் காட்டியருளினான். ஆக, பத்தாமத்யாயத்தில் விபூதி விஸ்தாரத்தைப் பேசி, பதினோராமத்யாயத்தில் விச்வரூபத்தைக் காட்டியருளினானாயிற்று. இவையெல்லாம் எம்பெருமானுடைய உடைமைகள். இவை அஸத்யமென்பது அத்வைதிகளின் கருத்து. உண்மையாக அஸத்யமாகில், இவற்றைக் கண்ட அர்ஜுநன் முடிவாகச் சொல்லுகிற வார்த்தை அப்படி யிருக்கமுடியாது. அந்த வார்த்தை ஏதென்னில்; (11–40) “அநந்த வீர்யாமித விக்ரமஸ் த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:" என்பது. இவ்விடத்திலே நம் ஸ்வாமியினுடைய பாஷ்யத்திலுள்ள ஸ்ரீஸூக்தியை மேலே யெடுத்துக் காட்டுவோம்; அந்த ஸ்ரீஸூக்தியிருக்கட்டும்; மூலத்தை மாத்திரமே பார்ப்போம்; பார்க்குமளவில் “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம,” “ஜததாத்ம்யமிதம் ஸர்வம்,” “தத் தவமஸி ச்வேதகேதோ." என்பன முதலான உபநிஷத்வாக்யங்களை விசிஷ்டாத்வைதிகள் எவ்விதமாக நிர்வஹிக்கிறார்களோ அவ்விதமாகத் தான் நிர்வஹிக்க வேண்டு மென்பது கீதாசார்ய ஸம்மதமாகத் தேறுகின்றது. மேலேகுறித்த ச்ருதி வாக்யங்களை நம்மவர்கள் நிர்வஹிக்கும் ப்ரகாரத்தை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ- உத்தரசதகத்தில் (23) "ஸ்தித்யுத்பத்தி ப்ரவ்ருத்தி" இத்யாதிச்லோகத்தில் சுருங்கக் காட்டியுள்ளார். அங்கு எம்முடைய வியாக்கியானத்தில் விரிவு காணலாம். அந்த ஶ்லோகத்தின் உத்தரார்த்தத்தில் மேலே குறித்த உபநிஷத் வாக்யங்கள் முன்றையும் அடைவே யெடுத்துக்காட்டி “ஏவமாத்யா: வ்யாக்க்யாதா ரங்கதாம ப்ரவண ! விஜயிபி. வைதிகைஸ் ஸார்வபௌமை: " என்று தலைக்கட்டியுள்ளார். ப்ரக்குத கீதா ச்லோகத்தில் 'ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ: " என்பதற்குப் பொருள் யாதெனில்; பகவானே! உலகிலுள்ள ஸகல பதார்த்தங்களையும் நீயே யாக வேதங்களிற் சொல்லியிருப்பதற்குக் காரணம் எல்லாவற்றிலும் நீ ஆத்மாவாக வியாபித்திருப்பதுதான்-என்பதாம். இங்கு கீதாபாஷ்ய ஸ்ரீஸூக்தி வருமாறு....வாயு: ..வாயு: யம: அக்நிரித்யாதி ஸர்வஸாமாநாதிகரண்ய நிர்தேசஸ்ய ஆத்மதயா வ்யாப்திரேவ ஹேதுரிதி ஸுவ்யக்தமுக்தம்” என்று. கண்ணபிரான் சொன்ன விபூதி விஸ்தாரங்களைக் கேட்டும், காட்டின விச்வரூபத்தைக் கண்டும் நின்ற அர்ஜுநன் “கண்ணா! உண்மையில் இல்லாதவற்றை யெல்லாம் எடுத்துச் சொல்லுகிறாயே, உண்மையாக இல்லாதவற்றை யெல்லாம் ஏறிட்டுக் காட்டுகிறாயே!” என்று சொல்லி யிருக்கவேண்டும் அத்வைதிகளின் கொள்கை உண்மையாயின். அர்ஜுநன் அப்படிச் சொல்லாமல் (ச்லோ. 38ல்) "த்வயா ததம் விச்மநந்தரூப” என்றும், “ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:" என்றும் சொல்லியிருக்கையாலே ப்ரபஞ்ச மெல்லாம் ஸத்யமென்றும் ஒன்றுகூட பொய்யல்ல வென்றும் நிஸ்ஸந்தேஹமாகத் தேறுகின்றது. அதவைதிகளின் வாதத்தை நிராதரமென்று நிரூபிக்கப் போதும். ஆக இவ்வத்யாயங்களிரண்டும்.

50. இனி பன்னிரண்டா மத்யாயத்திற் சிறிது அநுபவிப்போம். இதில் 18, 19 ச்லோகங்கள் ஸாரமானவை. அவையாவன-"ஸமச் சத்ரெள ச மித்ரே ச ததா மாநாவமாநயோ: , சீதோஷ்ணஸுக துக்கேஷு ஸமஸ் ஸங்கவிவர்ஜித: , துல்ய நிந்தாஸ்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித், அநிகேத: ஸ்திரமதி: பக்தி மாந் மே ப்ரியோ நர:" என்பன. பகைவனிடத்திலும் நண்பனிடத்திலும் ஒரே விதமான பாவனையுள்ளவனும், பஹுமானம் நேர்ந்தாலும் அவமானம் நேர்ந்தா லும் அவற்றையும் துல்யமாகவே பாவிப்பவனும், சீதோஷ்ணங்களையும் ஸுகதுக்கங்களையும் ஸமமாக நினைப்பவனும், எதிலும் பற்றில்லாமலிருப்பவனும், பிறர் நிந்திப்பதையும் துதிப்பதையும் துல்யமாக நினைப்பவனும், ஒருவரோடும் பேசாமலிருப்பவனும், ஏதேனு மொன்றினால் ஸந்துஷ்ட சித்தனாயிருப்பவனும் உறுதியும் பக்தியுமுடையவனுமானவன் எனக்குப் பரம ப்ரீதிபாத்ர பூதன் என்று சொல்லுகிறான் கண்ணபிரான். இப்படிப்பட்ட அதிகாரி உலகில் மிகவும் துர்லபனேயாயினும் இப்படியிருக்க ஆசைப்படவேணு மென்பதற்காகவே இஃது அருளிச் செய்தபடி.

51. இனி பதின் மூன்றாமத்யாயத்திற்குச் செல்வோம். இதில் முதல் ச்லோகமும் இரண்டாம் ச்லோகமும் சிறிது விபரீதவுணர்ச்சியை உண்டாக்குவது போலுள் து. இங்கு ஸ்வாமியினுடைய பாஷ்யமும் அதற்கு டீகையான தாத்பர்ய சந்த்ரிகையும் மிகமிக விரிவாக அமைந்திருக்கின்றது. மூல ச்லோகங்களாவன- "இதம் சரீரம் கௌந்தயே க்ஷேத்ரமித்யபிதீயதே, ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹு: ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:" என்பது முதல் ச்லோகம். இனி இரண்டாவது ச்லோகமாவது- "க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத!, க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞாநம் யத் தத் ஜ்ஞாநம் மதம் மம." என்பது. இங்கு (ஆபாத ப்ரதீதியில்) மேல்நோக்கில் என்ன தோற்றுகிறதென்றால், க்ஷேத்ரமென்னப்படுகிற அசேதநமும், க்ஷேத்ரஜ்ஞனென்னப்படுகிற சேதநனும் ஆகிய இரண்டையும் அர்ஜுநா! நானாக அறிந்துகொள் என்னப்படுகிறது பூர்வார்த்தத்தில்; க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களாகிய சேதநாசேதநங்களை யறிந்து கொள்வதென்பது யாதொன்றுண்டோ, அதுதான் என்னையறிந்து கொள்வதாகும் என்கிறது உத்தரார்த்தத் தில். இவற்றால் அத்வைதவாதம் ஸித்திக்கிறதென்று கருதிய சங்கராசாரியர் தமது பாஷ்யத்தில் அக்கருத்தை விளக்கியிருக்கின்றார். அதற்கு விரிவான மறுப்பு ஸ்வாமியின் கீதாபாஷ்யத்திலுள்ளது; மிகமிக விரிவான மறுப்பு தாத்பர்யசந்த்ரிகையிலுள்ளது. அதன் ஸாரத்தை மிகவும் சுருக்கமாகத் தெரிவிக்கிறோமிங்கு. தேஹத்திற்காட்டிலும் ஆத்மா வேறுபட்டவன் என்பது தெரிந்திருக்கச்செய்தேயும் ‘தேவோஹம் மநுஷ்யோஹம்' என்று வ்யவஹாரம் செய்துவருகிறோம். அஹம் என்பதற்கு ஆத்மா அர்த்தமேயொழிய தேஹம் அர்த்தமன்று; தேவத்வமோ மநுஷ்யத்வமோ சரீரத்திலுள்ளதேயன்றி அஹமர்த்தமான ஆத்மாவிலுள்ளதன்று. அப்படியிருந்தும் 'தேவ: அஹம், மநுஷ்ய: அஹம்' என்று ஸமாநாதிகரணமாக ப்ரயோகிப்பது எப்படி பொருந்துகிறதென்றால் கேண்மின். ஆத்மாவும் சரீரமும் ஒன்றைவிட்டொன்று தனித்து நிற்பனவல்ல. தேஹமானது ஆத்மாவுக்கு அப்ருதக்ஸித்த விசேஷணமாய்க் கொண்டேயிருப்பதால் இந்தச் சேர்த்தியையிட்டு ‘தேவ: அஹம், மநுஷ்ய: அஹம்' என்று வ்யவஹரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், தேவ சரீரக: அஹம், மநுஷ்ய சரீரக: அஹம் என்பதே யாம். ஏவஞ்ச, சரீரா த்மபாவரூபமான ஸம்பந்தத்தைக்கொண்டு பொருத்தப் பட்டதாயிற்று. இவ்வண்ணமாகவே “க்ஷேத்ரஜ்ஞஞ் சாபி மாம் வித்தி" என்றதும் சரீராத்ம பாவ ஸம்பந்த நிபந்தமாகவே பொருந்தக் குறையில்லை. அசேதநமான தேஹமானது ஜீவாத்மாவுக்கு சரீரமாயிருப்பது போல, இவ்விரண்டும் சேர்ந்து பரமாத்மாவுக்கு சரீரமாயிருக்கும் விஷயம் ஸுபாலோபநிஷத்து முதலானவற்றில் ஸுப்ரஸித்தமா யிருப்பதால் க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரஜ்ஞனையும் பரமாத்மாவாக நினைப்பதென்பது "க்ஷேத்ரக்ஷேத்ரஜஞ்சரீரக: பரமாத்மா-க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரஜ்ஞனையும் சரீரமாகக் கொண்டவன் பரமாத்மா” என்று நினைப்பதாகவே முடிந்து நிற்கும். இவ்விஷயம் பலபல உபபத்திகளுடன் ஸ்வாமி பாஷ்யத்தில் விரித்துரைக்கப் பட்டிருப்பது காண்க.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top