கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

58. இனி, பதினேழாமத்யாயத்திற் செல்வோம். இதில் மூவகையான தபஸ்ஸுக்களைக் கூறுகின்றான் கண்ணன். அவை சாரீர தபஸ்ஸென்றும், வாங்மய தபஸ்ஸென்றும், மாநஸ தபஸ்ஸென்றும் வழங்கப்படுவன. * ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து, தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர் கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய், தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.1.10-பெரிய திருமொழி* என்றும், *காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தை யுள்வைத்து மென்பீர், வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த, தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே. 3.3.3 பெரிய திருமொழி * என்றும் ஆழ்வார்கள் ஒருவிதமான உடல் தவத்தை யருளிச் செய்துள்ளார்கள். கீதாசார்யன் அருளிச்செய்வது அதனில் வேறுபட்டது. “தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் சௌசமார்ஜவம், ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச சரீரம் தப உச்யதே.” என்பது காயிக தபஸ்ஸைத் தெரிவிக்கும் ச்லோகம். பகவானையும் அந்தணர்களையும் ஆசாரியர்களையும் பண்டிதர்களையும் வழிபாடு செய்வது. புண்ய தீர்த்தங்களில் குடைந்தாடுவது, நெஞ்சில் நினைத்தபடியே அனுஷ்டித்துக் காட்டுவது, மாதர்களைக் கண்டு காதல் கொள்ளாமை, ப்ராணி பீடைகள் செய்யாமை ஆகிய இவை காயிக தபஸ்ஸெனப்படும். "அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத், ஸ்வாத்யாயாப்ப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே.” என்பது வாங்யமான தபஸ்ஸைத் தெரிவிக்கும் ச்லோகம். பிறரை நோவச் செய்யாத வார்த்தைகளைச் சொல்லுவது, உண்மையைச் சொல்லுவது, ப்ரியமும் ஹிதமுமானவற்றைச் சொல்லுவது, வேத மோதுவது ஆகியவிவை வாசிக தபஸ்ஸெனப்படும். "மந: ப்ரஸாதஸ்ஸெளம்யத்வம் மெளனமாத்மவிநிக்ரஹ: , பாவஸம்சுத்திரித் யேதத் தபோ மானஸமுச்யதே." கோபம் முதலியன கொள்ளாமையாகிற மனத் தெளிவு, பிறர்க்குத் தீங்கிழைக்க நினையாமையாகிற ஸௌம்யத்வம்; வாய்திறந்து பேசாமை, ஸதா தியானிக்கத் தகுந்த பரமபுருஷன் விஷயத்திலே நெஞ்சைச் செலுத்துகை, வேற்றுவிஷயங்களில் சிந்தனை கொள்ளாமை ஆகிய இவை மாநஸ தபஸ்ஸெனப்படும். இங்ஙனம் மூவகைப்பட்ட தபஸ்ஸு மறுபடியும் மூவகையாக வகுக்கப்படுகிறது; ஸாத்விகமென்றும் ராஜஸமென்றும் தாமஸ மென்றும்.

59. இப்படி மூன்று மூன்றாக வகுக்கப்படும் விஷயங்கள் பதினெட்டாமத்யா யத்திலும் பல கூறப்படுகின்றன. அதில் ஸுகமானது ஸாத்விகமென்றும் ராஜஸ மென்றும் தாமஸ மென்றும் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. எந்த ஸுகமானது உப ச்ரமதசையில் விஷம் போல விருந்து பரிணாமத்தில் அம்ருதம்போலாகிறதோ அது ஸாத்வீக ஸூகமாம். யோகம் தொடங்கும்போது வெகு ஆயாஸஸாத்யமாகையாலே துக்கம்போல் தோற்றும்; விபாகதசையில் அப்யாஸ பலத்தாலே அதுவே அம்ருதம்போலாகும். இதுதான் ஸாத்விகஸுகம். "யத் ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம், தத் ஸுகம் ஸாத் த்விகம் ப்ரோக்தம் ஆத்மசுத்தி ப்ரஸாதஜம்." (18-37.) என்கிற ச்லோகத்தை இங்கே அநுஸந்திப்பது.

60. இதற்கடுத்த ச்லோகம் "விஷயேந்த்ரியஸம்யோகாத் யத்ததக்ரே அம்ருதோபமம், பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்” என்பது. இந்த ச்லோகத்தை நம்மாழ்வார் திருவாய் மொழியில் (7-1-8) *இன்ன முதெனத் தோன்றி யோரைவர் யாவரையும் மயக்க, நீவைத்த முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன் சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கைதொழ வேயரு ளெனக்கு, என்னம் மா! என் கண்ணா! இமையோர்தம் குலமுதலே! * என்கிற பாசுரத்தினால் மொழிபெயர்த்திருக்கிறா ரென்னலாம். இந்திரியங்கள் சிற்றின்பங்களைப்பற்றி யநுபவிக்கும் ஸுகம் அநுபவ வேளையில் அமுதம்போல் தோன்றிப் பிறகு நரகஹேது வாகையாலே விஷமாகப் பரிணமிக்கும். இதுதான் ராஜஸ் ஸுகமென்பது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top