பகவத் கீதை

अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥ २०॥
அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்த்தித: |
அஹம் ஆதிச்ச மத்யஞ்ச பூதாநாம் அந்த ஏவ ச ||     10.20

அர்ஜுன ! எல்லா உயிர்களின் உள்ளத்தில் உறையும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் முதலுக்கும், இருப்புக்கும், முடிவுக்கும் காரணம் நானே.

ராமன் தசரதன் மகன் என்றால், தசரதன் ராமனின் தகப்பன் என்பது தேறுவது போல, உயிர்களுக்கெல்லாம் அவன் ஆத்மா என்பதினால், எல்லா உயிர்களும் அவனுக்குச் சரீரம் (உடல்) என்பது தன்னடைவே தேறுகிறது. அதே போல, உலகுக்கெல்லாம் காரணன் என்பதினால், அவ்வுலகெல்லாம் காரியப் பொருள் என்பதும் தேறி நிற்கும். அதாவது அவை அனைத்தும் அவனுடைய விபூதி (சொத்து) எனப்படுகிறது.

காரணமும் காரியப் பொருளும் ஒன்றாயிராது. அதுபோல ஸ்வாமியும் சொத்தும் வேறுபட்டதே. இதனால் ஸர்வேச்வரன் வேறு, அவனுடைய உடலாயும் சொத்தாயுமுள்ள அறிவற்ற, அறிவுள்ள பொருள்களும் வேறு பட்டவை. தத்வங்கள் மூன்று என்பது தெளிவாகிறது இந்த சுலோகத்தினால்.

ப்ரஹ்மம் ஒன்றே உண்மைப் பொருள்; மற்றவை அனைத்தும் மித்யை, பொய், வெறும் தோற்றம் என்னும் அத்வைத மதக் கொள்கை க்ருஷ்ணனின் இந்த சுலோகத்தினால் மறுக்கப்படுகிறது.

பகவான் இதை இங்கே சொல்வதற்குக் காரணம் என்ன?

மேலே பல சுலோகங்களில் கண்ணன் தன் விபூதிகளை (சிறப்பை) சொல்லப் போகிறான். அவைகளில் “ஆதித்யானாம் அஹம் விஷ்ணு:” என்றும் “ஆயுதனாம் அஹம் வஜ்ரம்” என்றும் பல சேதனப் பொருள்களையும் அசேதனப் பொருள்களையும் ஒக்க எடுத்துச் சொல்லி, “அவைகள் நான்” என்கிறான். அதாவது “அவைகளுக்கெல்லாம் ஆத்மா நான், அவைகள் எனக்குச் சரீரம்” என்பதையே கூறுகிறான். அந்தக் கருத்தை தெளிவுபடுத்துவதற்காகவே, முந்துற முன்னம் இந்த ச்லோகத்தில் “அஹமாத்மா குடா கேச ஸர்வபூதாசயஸ்தித:” என்கிறான்.

உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் நான் ஆத்மா. அவை எனக்கு உடல். அவற்றின் படைப்பு, இருப்பு, மறைவு, இவைகளுக்கு நானே காரணம்.

எந்தப் பொருள் உண்டாவதற்கும் மூன்றுவித காரணங்களை நாம் பார்க்கலாம். ஒரு குடம் உண்டாக குயவன் நிமித்த காரணம்; மண் உபாதான காரணம், தண்டம், சக்கரம் ஸஹகாரி (உதவும் கருவி) காரணம்.

இந்த உலகம் உண்டாக, இந்த மூன்றுவித காரணமுமாய் இருப்பவன் பகவான் ஒருவனே. அவனுடைய சரீரமாகிற மூல ப்ரக்ருதியிலிருந்தே இவை உண்டாவதினால் அவனே உபாதான காரணமாயும், அவன் ஸங்கல்பத்தினால் (நினைவு) மாத்திரத்திலே அவை தோன்றுகிறபடியால் அவனே நிமித்த காரணமாயும், அவனது அறிவாற்றல்களே அறிவாற்றல்களே உதவுவதால் அவனே ஸஹகாரி காரணமாயும் அமைகின்றன. இப்படி உலக ச்ருஷ்டிக்கு மூன்று வித காரணமும் பகவானே என்பது தேறுகிறது.

உலகில் ராமன் என்னும் உடலையும், அவனது ஆத்மாவையும் சேர்த்தே, "ராமன் வந்தான்" என்கிறோம். அதே போல் தனக்கு உடலாயுள்ள சூரியன், ஆயுதம் இவைகளையும் அவைகளில் ஆத்மா வாயிருக்கும் தன்னையும் சேர்த்தே, மேல் சுலோகங்களில் "நான் சூரியன், நான் வஜ்ராயுதம்" என்று கூறுகிறான். இதையே “அஹ மாத்மா குடாகேச” என்கிற இந்த சுலோகத்தில் விளக்கியிருக்கிறான்.

பகவானுக்கும் இவ்வுலகுக்கும் உள்ள இந்த சரீர, ஆத்ம சம்பந்தம் எவ்வாறு உள்ளது?

நம் உடல் அழிவுடையது. உடல் அழிந்தால், அவ்வுடலுக்கும் அதின் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பும் அழிந்து விடுகிறது. ஆனால் ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் உள்ள உறவு இதுபோன்றது அல்ல. “உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்கிறபடி. இது நித்யமானது; அதாவது அழிவில்லாதது; என்றும் பிரிவில்லாதது.

மனிதனுக்குள்ள மனிதத்வம், மாடுகளுக்குள்ள மிருகத்வம் என்கிற ஜாதியைப் பற்றிய சம்பந்தத்தையும், அதே போல மலருக்கு உள்ள மணம், ரத்னத்திற்குள்ள ஒளி, வஸ்திரத்திற்குள்ள வெண்மை போன்ற குண சம்பந்தத்தையும், எப்படி அந்தந்த பொருள்களினின்று பிரிக்க முடியாதோ அதே போல பகவானுக்கும் உயிர்களுக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பிரிக்க முடியாது; இதையே சாஸ்திரங்களில் “அபிரதக் சித்தி விசேஷணம்” என்பர். [பிரிக்க முடியாத]

இப்படியில்லாமல் ஒருவன் ஒரு ஆபரணத்தை பூண்டிருக்கிறான்; ஒரு தடியை கையில் வைத்திருக்கிறான்; அந்த ஆபரணத்தையோ தடியையோ அவனிடமிருந்து பிரித்து விடலாம்; இது “பிரதக் சித்தி விசேஷணம்” என்பர்.

இப்படி பிரிக்க முடியாத உறவு பகவானுக்கும் உயிர்களுக்கும் எத்தனை காலமாக உள்ளது?

இந்த சரீர ஆத்ம சம்பந்தம் அநாதியானது; எக்காலத்திலும் உள்ளது. சிருஷ்டிக்கு முன்னும் ஸூக்ஷ்மமாய் (கண்ணுக்குத் தெரியாததாய்) நுண்ணியதாய் தமஸில் அடங்கியிருக்கும் காலத்திலும் அவைகள் உடலாய், தான் ஆத்மாவாய், அவைகளில் பகவான் இருக்கிறான்; அந்த ஸூக்ஷ்ம அசித், ஸ்தூலமாகி (கண்ணுக்குத் தோன்றி) பெயர், வடிவம் பெற்றிருந்தும் படைப்புக் காலத்திலும் அவைகளில் ஆத்மாவாகயிருந்து அவைகளைத் தனக்குச் சரீரமாகக் கொண்டிருக்கிறான். அசித்துக்கே (அதாவது அறிவில்லாத அசேதனப் பொருள்களுக்கே) ஸூக்ஷ்மமாயும் ஸ்தூலமாயும் மாறும் தன்மை உண்டு. ஜீவாத்மாக்களுக்கும், பகவானுக்கும் இவ்வித மாறுதல் கிடையாது.

இப்படி தனக்கு மற்றெல்லாப் பொருள்களுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத சரீர ஆத்ம சம்பந்தத்தை யிட்டே, மேலே பல சுலோகங்களில், பல சேதன, அசேதனங்களைச் சொல்லி, “அவைகள் நான், அதாவது அவைகள் எனக்கு உடலாய், என் விபூதியாய், நான் அவைகளில் ஆத்மாவாய், அவைகளுக்கு சுவாமியாய் (சொத்துக்கு உடையவனாய்) இருக்கிறேன்” என்பதைக் கூறுகிறான் கண்ணன்.

இனி விபூதி யோகம் சொல்லப்படுகிறது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top