பகவத் கீதை

பதினோராம் அத்தியாயம்-விசுவரூப ஸந்தரிசனயோகம்

अर्जुन उवाच :-
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥ १ ॥
அர்ஜுன உவாச:- மதநுக்ரஹாய பரமம் குஹ்யம் அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம் |
யத் த்வயோக்தம் வசஸ்தேந மோஹோயம் விசுதோ மம ||     11.1

பதினோராம் அத்தியாயம் விசுவரூப தர்சன யோகம் அவதாரிகை

விசிஷ்டாத்வைத மதத்தில் ஒரு ஜீவன் அடையக்கூடிய மேலான பயன் மோக்ஷம். இதைப் பெற விரும்புகிறவன் முமுக்ஷு எனப்படுவான். மோக்ஷம் பெற பகவத் பக்தியே உபாயம். பக்திக்கு அங்கமானவை கர்மயோகம், ஞான யோகம், இவைகளை முதல் ஆறு அத்தியாயங்களில் கண்ணன் விரிவாக அருளிச் செய்தான். ஏழாம் அத்தியாயம் முதல் அங்கியான பக்தியைச் சொல்லி வருகிறான்.

ஏழாம் அத்தியாயத்தில் பகவானின் மேன்மையையும், அதை அறிய விடாமல் நம்மைத் தடுக்கும் பிரக்ருதியான மாயையை, அவனை சரணம் பற்றியே போக்க வேண்டும் என்பதையும் சொல்லி, தன்னிடம் பக்தி செய்பவர் நான்கு வகைப்படுவர்; அவர்களில் ஞானியே சிறந்தவன்; அவன் தனக்கு மிகவும் பிரியன் என்பதையும் சொன்னான்.

எட்டாம் அத்தியாயத்தில் இந்த நான்கு பக்தர்களும் அறிய வேண்டியவைகளும், செய்யவேண்டியவைகளும், அவர்களுடைய அந்திம ஸ்ம்ருதி, (இறுதி நினைவு) எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டன.

ஒன்பதாம் அத்தியாயத்தில், தன்னுடைய மனுஷ்யத்வே பரத்துவம், அதாவது தன் எல்லா அவதாரங்களிலும் தன் பரத்துவத்தை (தெய்வத் தன்மையை) ஒன்றையும் விடாமல், தன் ஞான, சக்தி, கல்யாண குணங்களுடனேயே பிறப்பதைப் பற்றிக்கூறி, இப்படி தன்னை உள்ளபடி அறியும் ஞானியின் சிறப்பையும், அவன் செய்யும் பக்தி யோகத்தின் தன்மையையும், விரிவாக எடுத்துரைத்தான் கண்ணன். பத்தாம் அத்தியாயத்தில் முதல் சில சுலோகங்களில் பகவத் பக்தி உண்டாகும் வழியையும், அது வளர்வதற்கான உபாயத்தையும் கூறினான். பிறகு பகவானான தன் சிறப்பையெல்லாம் எடுத்துச் சொன்னான். தானே உலகைப் படைத்து, காத்து, அழிப்பவன்; தானே எல்லா உயிர்களிலும் ஆத்மாவாக இருந்து அவைகளை நியமித்து ஆள்பவன்; எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரம்; தன் சொத்து, தன் விபூதி என்பதை விரித்துரைத்தான்.

இனி பதினோராம் அத்தியாயத்தில், பகவானுடைய விபூதியையெல்லாம் நேரில் காண விரும்பிய அர்ஜுனனுக்குத் தன் விசுவரூபத்தைக் காட்டி யருளுகிறான்.

ஸ்லோகத்தின் பொருள்:

அர்ஜுனன் சொன்னது :-

எனக்கு அருள் செய்யும் பொருட்டு மிகவும் ரஹஸ்யமான ஜீவாத்ம விஷயமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் நீ அருளிச் செய்ததைக் கேட்டு என்னுடைய கலக்கம் தீர்ந்தது; ஜீவாத்மா, சரீரம் இவைகளைப் பற்றிய தெளிவு பெற்றேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top