பகவத் கீதை

ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादिमत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥ १३.१३ ॥
ஜ்ஞேயம் யத் தத் ப்ரவக்ஷ்யாமி யத் ஜ்ஞாத்வா அம்ருத்மச்நுதே |
அநாதி மத்பரம் ப்ரஹ்ம ந ஸத் தந்நஸத் உச்யதே ||        13.13

யாவனொருவன் கீழ்ச் சொன்ன அமாநித்வம் முதலான குணங்களால், அறியத்தக்க பரிசுத்த ஆத்மாவை அறிந்து, அவனைக் காண்கிறானோ, அவன் அந்த ஆத்மாவை அழிவில்லாது நித்யனாயும், எனக்கு தாஸனாகவும், நான் அவனுக்கு சுவாமியாகவும் தன் தர்ம பூத ஜ்ஞானத்தினால் எங்கும் பரவியிருப்பவனாயும், ஸத் என்றோ அஸத் என்றோ சொல்ல முடியாதவனாயும் அறிகிறான்.

இரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்படாத சிலவற்றை இங்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லுகிறான். ஆனால் அவை பரமாத்மாவைப் பற்றிச் சொல்லுவது போல தோன்றும். முக்த ஜீவனுக்கும் பகவானுக்கும் பலவிதத்தில் ஸாம்யம் உண்டு.

ஜீவன் ஆதியும் அந்தமுமில்லாதவன், அதாவது என்றுமிருப்பவன்; 'அணு' ஸ்வரூபன். ச்ருஷ்டிக்கு முன்பு பெயர் வடிவத்தை இழந்த அசித்தை தனக்குச் சரீரமாகக் கொண்டவன்; ஆதலால் அஸத் என்று கூறலாம்; ச்ருஷ்டி தசையில் பெயர் வடிவம் கொண்ட அத்தை சரீரமாகக் கொண்டிருப்பதினால் அவனை ஸத் என்றும் கூறலாம்.

அணு வடிவில் ஜ்ஞான மயனாயும், ஜ்ஞானத்தை குணமாகவும் கொண்டவன் ஜீவன். ஆனால் சம்சார தசையில் அந்த ஜ்ஞானம் சுருங்கியிருக்கும். முக்தி தசையில் அமர உடல் பெற்று அந்த ஜ்ஞானம் முழுதும் மலர்ந்து உலக முழுவதும் பரவியிருக்கும். ஆதலால் தன் ஜ்ஞான ஒளியினால் எங்கும் பரவியிருக்கும் தன்மையுடையவன் ஜீவன். இப்படிப்பட்ட பெரியோன்; அவனை ப்ரஹ்மம் என்றே போஷித்துக் கூறுகிறான் கண்ணன்.

அசேதனத்திற்கும் சில பெருமைகள் உண்டு. ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் பிரக்ருத்திக்கே உள்ளவை. கீழ் ஏழு உலகம் மேல் ஏழு உலகம் கொண்டது ஓர் அண்டம். இப்படி பல அண்டங்களாகப் பரிணமித்தும், மூலப்ரக்ருதியில், அது மிகுந்திருக்கும். இப்படிப்பட்ட பெருமை ப்ரக்ருதிக்கு உண்டு. ஜ்ஞானத்தினால் பரவியிருக்கும் பெருமை ஜீவனுக்கு உண்டு. இவைகளுக்கெல்லாம் மேன்பட்டவன் நான், மத்பரம் என்கிறான். அவைகளுக்கெல்லாம் சுவாமி நான், இவைகளெல்லாம் எனக்கு சேஷமானவை; என் அடிமை, என் சொத்து என்கிறான் கண்ணன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top