பகவத் கீதை

यावत्संजायते किंचित्सत्‍तवं स्थावरजङ्गमम् |
क्षेत्रक्षेत्रज्ञ संयोगात्तद्विद्धि भरतर्षभ ॥ १३.२७ ॥

யாவத் ஸஞ்ஜாயதே கிஞ்சித் ஸத்வம் ஸத்தாவர ஜங்கமம் |
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஸம்யோகாத் தத்வித்தி பரதர்ஷபா ||        13.27

அர்ஜுன ! உலகிலுள்ள எல்லா, ஐங்கம, ஸ்தாவரங்களும், உடல் உயிர் இவைகளின் சேர்க்கையினாலேயே உண்டாவை என்பதை அறிவாயாக. இந்த உடல் உயிர் சேர்க்கை எப்படிப்பட்டது?

அத்வைத மதம் - சரீர ஆத்ம சேர்க்கையை அத்யாஸம் என்பர். அதாவது ஒன்று மற்றொன்றாகத் தோற்றுவது. உடல் உண்மையில் இல்லை; வெறும் தோற்றமே, ஆத்மா ஒருவனே உண்மையாக உளன். அவன் ப்ரஹ்மம் ஜீவாத்மா என்று தனிப்பட்ட தத்வம் கிடையாது.

இந்த சுலோகத்தில் க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ச ஸம்யோகாத் தத்வித்தி - என்பதற்கு, க்ஷேத்ரம் எனப்படும் சரீரத்தையும், க்ஷேத்ரஞ்ஜனான ஜீவன் (ப்ரஹ்மம்) என்பதாகவே அறிய வேண்டும் என்றே இவர்கள் பொருள் கூறியிருக்கின்றனர்.

முத்துச்சிப்பியைப் பார்த்து ஒருவன் வெள்ளி என மயங்குகிறான்; அதை வெள்ளி அன்று சிப்பி என்று அறிவதே ஜ்ஞானம், உண்மையான அறிவு; அதே போல உண்மையில் ப்ரக்ருதியோ; ப்ரக்ருதியினாலான சரீரமோ கிடையாது; ஜீவன் ஒருவனே உளன். அந்த ஜீவன்தான் ப்ரஹ்மம். இப்படி எல்லாவற்றையும் ப்ரஹ்மமாக அறிவதே ஜ்ஞானம். இந்த உண்மையான அறிவு பெற்றவனுக்கு சரீரமோ ஜீவனோ எதுவும் தோற்றாது; ப்ரஹ்மம் ஒன்றே தோற்றும். ஆதலால் இந்த சுலோகத்திற்கு, உலகில் உள்ள எல்லா ஜங்கம ஸ்தாவர பொருள்கள் அனைத்தும் ப்ரஹ்மம் என்பதே பொருள் என்கிறார்கள் அத்வைதிகள்.

விசிஷ்டாத்வைத மதம் - ப்ரக்ருதியும், ப்ரக்ருதியினாலான உடலும் உண்மை - ஜீவாத்மாவும் உண்மை - இவையிரண்டும் பகவானை விட்டு வேறுபட்ட தத்வங்கள். அவனை விடத் தாழ்ந்தவைகள். அவனுக்கு சரீரமாய் அவனால் தரிக்கப்பட்டுள்ளவை. இதை புருஷோத்தம வித்யையில் தெளிவாகக் கண்ணன் அருளிச் செய்திருக்கிறான்.

இந்த உடலுக்கும் ஜீவனுக்கும் உள்ள சம்பந்தம் ஸம்யோகம் எனப்படும். அத்யாஸம் தோற்றமன்று; இந்த சலோகத்திலும் கண்ணன் "க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ச ஸம்யோகாத்" என்று ஸம்யோக பதத்தையிட்டே கூறியிருக்கிறான், ஸம்யோகம் என்றால் சேர்க்கை என்பதே பொருள்.

முத்துச் சிப்பி ஜடப் பொருள். தானாக பிரகாஸிக்கக் கூடிய பொருளன்று; ஜீவனின் ஜ்ஞானத்தினால் அறியப்படும் பொருள்; இந்த ஜ்ஞானக் குறைவினால் வெகு தூரத்திலுள்ள சிப்பியை வெள்ளி என்று நினைக்கிறான். அதை எடுக்க அருகில் சென்றதும் ஞானம் மலர்ந்து அதைச் சிப்பி என்று அறிகிறான். இது சிப்பியின் தோற்ற மாறுதலாலன்று; ஜீவன் தன்னைத்தானே அறியக் கூடியவன்; மற்றொன்றால் அறியப்படும் ஜடப்பொருளன்று. ஆதலால் ஜீவாத்மாவை சரீரம் என்று மயங்க நியாயமில்லை. ஏனெனில் ஆத்மாவும் அதன் ஜ்ஞானமும் ஒன்று அதாவது ஜீவாத்மா ஞான உருவாயுள்ளவன்.

இன்னும் கண்ணன் கீதை ஆரம்ப முதல் பல இடங்களில் சரீரம் வேறு, ஜீவன் வேறு என்று பலபடியாக சொல்லியிருக்கிறான். ஆகையால் இங்கு உடலே ஜீவனாகத் தோற்றம் அளிக்கிறது என்கிற பொருள் சிறிதும் பொருந்தாது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top