பகவத் கீதை

क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यचज्ज्ञानं मतं मम || १३.३ |।

க்ஷேத்ரஜ்ஞம்சாபி மாம் வித்தி ஸர்வ க்ஷேத்ரேஷு பாரத |
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞானம் யத் தத் ஜ்ஞானம் மதம் மம ||        13.3

அர்ஜூன! எல்லா உடலிலுள்ள ஜீவனும் நான் என்பதை நீ அறிவாயாக. இப்படி உடல் உயிர் இவைகளைப் பற்றிய அறிவே உண்மை அறிவு என்பது எனது கருத்து.

கீழ் உடல், உயிர் இரண்டையும் சொல்லி, இங்கு உடலிலுள்ள ஜீவாத்மாவும், 'உம்" என்பதினால், உடல் எப்படி நானாகயிருக்கிறேனோ, அதுபோல அதினுள் உள்ள ஜீவனும் நான் என்கிறான். அதாவது உலகிலுள்ள எல்லா சேதன, அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மம் என்கிற அத்வைத மதக் கொள்கையையே இதில் கண்ணன் கூறுவதாகத் தோன்றும்.

ஆனால் இது சரியான பொருளாகாது. உலகிலுள்ள எல்லா அசேதனப் பொருள்களிலும் நான் ஆத்மாவாயிருப்பது போல, எல்லா ஜீவாத்மாக்களிலும், நான் ஆத்மாவாகயிருக்கிறேன். இப்படி என்னை அறிவதே சரியான அறிவு என்பதே இந்த சுலோகத்திற்குச் சரியான பொருள்.

இதை எம்பெருமானார் பல சுருதி வாக்கியங்களையும், மற்றும் பல கீதா வாக்கியங்களையும் கொண்டு வெகு அழகாய் நிரூபித்திருக்கிறார்.

2ம் அத். 12-ம் சுலோகம் "நத்வேவாஹம் ஜாதுநாஸம் சுலோகத்தில், பகவானான தன்னை 'நான்' என்றும் ஜீவாத்மாக்களை, 'நீ', இவர்கள்; என்றும் பிரித்து தனித்தனி தத்வங்களாகவே சொல்லியிருக்கிறான்; அப்படியிருக்க இங்கே எல்லா ஜீவாத்மாக்களும், பகவானான தானே என்று பொருள் கொள்வது சேராது.

இன்னும் ஏழாம் அத்யாயத்தில் பராப்ரக்ருதி அபராப்ரக்ருதி என்று உடலையும் உயிரையும் பிரித்துச் சொல்லி, 'இதீயம்மே' அவைகள் என் சொத்து, நான் அவைகளுக்கு, ஸ்வாமி என்றும் சொல்லியிருப்பதினால், இங்கே எல்லாம் பகவான், ப்ரஹ்மம் என்று பொருள் கொள்ள இயலாது.

'அஹமாத்மா குடாகேச என்னும் பத்தாவது அத்யாய சுலோகத்தில், சேதன அசேதனமெல்லாம் தனக்குச் சரீரம், தான் அவைகளுக்கு ஆத்மாவாகயிருப்பவன் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறான். மேலும் உடல் அசித்து; அறிவு சிறிதும் இல்லாதது; அறிவேயில்லாத அசேதனமும், ஸர்வஜ்ஞனான (எல்லாம் அறிந்த) பகவானும், ஒன்றாகயிருத்தல் இயலாது. இதை அத்வைதிகளும். ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் விபூதி அத்யாயத்தில் “சிகராணாம் அஹம் மேரு" போன்ற வாக்கியங்களுக்கு, மேருமலை எனக்கு சரீரம்; நான் ஆத்மா என்றே அத்வைதிகளும் பொருள் கூறியுள்ளனர்.

அது போல, இங்கும் உடலான அசேதனத்தில் எப்படி நான் ஆத்மாவாகயிருக்கிறேனோ, அதுபோல் ஜீவனிலும் நான் ஆத்மாவாகயிருக்கிறேன் என்பதே சரியான பொருள். இப்படி கீதை ஆரம்ப முதல் பன்னிரெண்டாம் அத்தியாயம் முடிய, சேதன அசேதனங்களையும் தன்னையும் பிரித்தே, தனித்தனி தத்வங்களாகச் சொல்லி வந்து, இந்த பதின்மூன்றாம் அத்தியாயம் முதலில் எல்லாம் நான் என்று ஜீவ பர ஐக்கியத்தைச் சொல்லுவதாகப் பொருள் கூறுவது பொருந்தாது.

சுருதியிலும், "யஸ்ய ஆத்மா சரீரம்; யஸ்ய ப்ரதிவி சரீரம்" என்பது போன்ற பல வாக்கியங்களைக் காணலாம்; பூதானி விஷ்ணு; புவனானி விஷ்ணு: என்னும் வாக்யம் போல ‘க்ஷேத்ரஞ்ச மாம்' என்று இங்கு கண்ணன் கூறியிருக்கிறான் என்பதே பொருள்.

இனி "க்ஷேத்ரஜ்ஞ:” ஜீவனும் என்று ஒருமையில் கண்ணன் கூறியிருக்கிறானே! ஜீவாத்மா ஒன்றா, பலவா? ஜீவ சமூகத்தை பல நெல் எல்லாம் சேர்த்து ஒன்று என்று சொல்லியிருக்கிறான். குவியல் உள்ள இடத்தில் "இது ஒரு நெல்'" என்று ஒரு குவியல் போல, இது நெல்லை அதன் ஜாதியைப் பற்றிச் சொல்வது "ஜாத்யேக வசனம்”.

இரண்டாம் வாக்யத்தினால், அர்ஜூன! மற்றெல்லா அறிவும் அறிவல்ல; பகவானுக்கும் சித் அசித்துக்களுக்கும் உள்ள இந்த சரீர ஆத்ம சம்பந்தத்தை பற்றி அறிவதே சரியான அறிவாகும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top