பகவத் கீதை

पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥ १३.२२ ॥

புருஷ: ப்ரக்ருதிஸ்த்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந் குணாந் |
காரணம் குண ஸங்கோஸ்ய ஸதஸத்யோநி ஜந்மஸு ||        13.22

ஜீவன் ப்ரக்ருதியினாலான உடலில் இருந்துகொண்டு, அந்த உடலுக்கு உண்டான ஸத்வ ரஜஸ் தமோ குணங்களினாலான சுக துக்கங்களை அனுபவிக்கிறான். இந்த குணானுபவப் பற்றுதலே ஜீவன் பற்பல பிறவிகள் எடுக்க காரணமாகிறது.

ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் உடலுக்கே உள்ளவை. ஸத்வ குணத்தினால் சுகமும், ரஜஸ்ஸினால் துன்பமும், தமஸ்ஸினால் மோஹமும் உண்டாகின்றன. உடலில் இருக்கும் ஜீவன், இவைகளில் பற்றுதல் உடையவனாய் அவைகளை அனுபவிக்கிறான். ஸத்வ குணத்தின் பற்றுதலினால் தேவ, மனிதனாகவும், மற்ற இரண்டு குணங்களின் பற்றுதலினால் மிருகம், பறவை, தாவரமாகவும் ஜீவனுக்குப் பிறவிகள் உண்டாகின்றன.

அத்வைத மதத்தின் கொள்கை என்ன வென்றால், உடல் உயிர் இவ்விரண்டும் மித்யை (பொய்) அவைகளின் சேர்க்கையும், அதனால் உண்டாகும் குணங்களும், சுக துக்கங்கள் எல்லாம் மித்யை, வெறும் தோற்றம், உண்மையல்ல என்பதேயாம். ஆனால் இங்கே கண்ணன் ப்ரக்ருதியினாலான உடலும் உண்டு; ஜீவன் அதிலிருக்கிறான். உடலுக்குண்டான குணங்களும் அதனால் ஏற்படும் சுக துக்கங்களும் உண்மை. அதை ஜீவன் அனுபவிக்கிறான்; இதனடியாக அவனுக்குப் பற்பல பிறவிகள் உண்டாகின்றன என்பதும் சத்யம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறான். ஆகவே அத்வைத மதக் கொள்கை, இந்த கீதா சுலோகத்திற்குச் சிறிதும் பொருந்தாது.

அத்வைதிகள் உடல், உயிர் இவைகளின் சேர்க்கை, குணங்கள், சுகதுக்கம். மறுபிறவிகள் எல்லாம் வெறும் தோற்றம், ஆரோபிதம் - உண்மையல்ல 'தாத்பிதம்' என்கிறார்கள்.

ஆரோபிதம் - ஒரு வெண்மையான துணியின் மீது ஒரு சிவப்பு வண்ண ஒளி (Light) படுகிறது. அந்தத் துணி சிவப்பாகத் தோன்றுகிறது. இதுதான் ஆரோபிதம் என்பது.

தாத்பிதம் - அதே வெண்மையான துணியின் பேரில் ஒரு சிவப்பு தண்ணீர் (Red ink) கொட்டிவிடுகிறது. அந்தத் துணி சிவப்பாகிவிடுகிறது. இதுவே தாத்பிதம்.

ஆரோபிதமாகயிருந்தால், (அதாவது வெறும் தோற்றமாயிருந்தால்) அதைப் போக்க நாம் முயற்சி செய்யமாட்டோம்; தாத்பிதமாகயிருந்தால், (அதாவது சிவப்பின் சேர்க்கையாக இருந்தால்) அதைப் போக்க முயற்சி செய்கிறோம் அன்றோ!

உபநிஷத், ப்ரஹ்ம சூத்திரம், கீதா சாஸ்திரம் இவை மூன்றையும் ஆதாரமாக அத்வைதிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இவை மூன்றிலும் உடல், ஜீவன் இவைகளின் சம்பந்தம், அதனால் உண்டாகும் சுக துக்கங்கள், கர்மம் இதனால் உண்டாகும் பல பிறவிகளைப் பற்றிச்சொல்லி, அவைகளைப் போக்கி, மறு பிறவியில்லாத முக்தி (மோக்ஷத்தையும்) யையும் சொல்லியிருங்கன்றன. ஆரோபிதமாயிருந்தால் (தோற்றமாக) அவைகளைப் போக்க உபாயத்தை இவைகள் சொல்ல வேண்டியதில்லை; ஆகையினால் உடல் உயிர் இவைகளின் சேர்க்கை, கர்மம், மறுபிறவிகள் எல்லாம் தாத்பிதமே- உண்மையே என்பது தேறுகிறது

இதற்கு மேல் ஒரு கேள்வி -- இவை உண்மையாக (தாத்பிதமாக) யிருந்தால், அவை ஒளபாதிகமா (ஒரு காரணத்தைப் பற்றினதா). அல்லது ஸ்வாபாவிகமா? இயற்கையாக உண்டானவைகளா?

ஜீவனுக்கு உடலின் சேர்க்கையும், சுக துக்கங்களும், கர்மாவும், மறுபிறவிகளும் எல்லாம் ஒரு உபாதியைப் பற்றி வந்தது; அதாவது ஒளபாதிகமேயாம். ஓர் காரணத்தைப் பற்றியவைகளேயாம். இயற்கையானதல்ல; அதனால்தான் அக்காரணங்களை அறிந்து, அவைகளைப் போக்கி மறுபிறவியில்லா ஆத்ம நன்மையைப் பெறவே இந்த கண்ணனின் கீதா உபதேசம் ஏற்பட்டது. மற்ற சுருதிகளும் இவைகளையே கூறுகின்றன.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top