பகவத் கீதை

इति गुह्‍यतमं शास्त्रमिदमुक्तं मयाऽनघ ।
एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥ १५.२० ॥

இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயா அநக |
ஏதத் புத்த்வா புத்திமாத் ஸ்யாத் க்ருதக்ருத்யச்ச பாரத ||        15.20

இவ்விதம் நானே புருஷோத்தமன் என்கிற மிக ரஹஸ்யமான உயர்ந்த இந்த சாஸ்திரத்தை, குற்றமற்ற உனக்கு நான் உரைத்தேன்; இதை அறிந்தவன் என்னை அடைய விரும்பி, அதற்கேற்ப அறிவைப் பெற்று, அதற்குண்டானவைகளை யெல்லாம் செய்தவனாவான்.

பகவத்கீதை முழுதுமே சாஸ்திரம் என்பதனால், இது மிகவும் சிறப்புடைய சாஸ்த்ரம் எனப்படுகிறது. ஏனெனில் இது வேதாந்த சாரம். பகவானை புருஷோத்தமன் என்று அறிபவனே ஜ்ஞானியாகிறான். இந்த புருஷோத்தம ஞானமே, அவனை அடைய ஆசையைத் தூண்டி, அதற்காகச் செய்ய வேண்டியவைகளை அறிந்து செய்தவனாகிறான்.

குஹ்யதமம் - மிக ரஹஸ்யமானது என்பதினால் மறைக்கத் தகுந்தது. தகுதியில்லாதவருக்குச் சொல்லக்கூடாது. அநக பாரத என்பதினால் நீ தோஷமற்றவன், குலப்பிறப்பினாலும் மேன்பட்டவன்; இதைக் கேட்கத்தகுதியுள்ளவன் என்பது சொல்லப்படுகிறது.

மயா - என்னால் - என்பதினால் தத்வத்தை உள்ளபடி சொல்ல ஜ்ஞான சக்திகள் பெற்ற என்னால். உனக்கு - இதை அறியத் தகுந்தவனாயும், என் நன்பனாயுமுள்ள உனக்கு. புத்திமான் - "தத் ஜ்ஞானம், தத: அன்யத் உக்தம், அஜ்ஞானம்" பரமாத்மாவைப் பற்றிய அறிவே ஜ்ஞானம், மற்றவையெல்லாம் அஜ்ஞானம்,(அறிவின்மையே) என்று சொல்லப்பட்டது. இதில் சொல்லப்பட்ட புருஷோத்தம வித்யையை, அறிவதே ஜ்ஞானமாகும். மற்றவையெல்லாம் செருப்புக்குத்த கற்றது போல அற்ப ஜ்ஞானம் என்பர் பெரியோர்; இந்த புருஷோத்தமன் என்கிற திருநாமத்தின் பொருளை உள்ளபடி அறிந்தால், அது மோக்ஷத்தில் இச்சையை உண்டாக்கி அதற்கான செயலைச் செய்து பகவானையே அடைகிறான்.

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த கீதார்த்த ஸ்ங்க்ரஹம்

अचिन्मिश्राद्विशुद्धाच्च चेतना पुरुषोत्तमः ।
व्यापनाद्भरणास्वाम्यात् अन्यः पञ्चदशोदितः ।। १९ ।।

அசிந்மிச்ராத் விசுத்தச்ச சேதநாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அத்ய பஞ்சசோதித:

எங்கும் வ்யாபித்து தரித்து, நியமித்து ஸ்வாமியாக இருத்தலால், பரமாத்மா, மற்றும் பத்தன், முக்தன் ஆகிய ஜீவாத்மாக்களைக் காட்டிலும் சிறந்தவன், அவனே புருஷோத்தமன் என்பது இந்த பதினைந்தாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டது.

ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்!

பதினைந்தாம் அத்யாயம்- புருஷோத்தம ப்ராப்தியோகம் முற்றிற்று.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top