43. (518) "வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி, சுநி சைவ ச்வபாகே ச பண்டிதாஸ்ஸமதர்சிந:." இதில் 'வித்யாவிநயஸம்பந்நே' என்பதை விசேஷணமாகக் கொண்டு 'ப்ராஹ்மணே' என்கிற விசேஷ்யத்தில் இதை அந்வயித்து, வித்யா விநயங்களோடு கூடியிருக்கிற உத்தம ப்ராஹ்மணனிடத்தில் என்பதாகப் பொருள் விவரித்தார் சங்கராசாரியர். ஒரு விதமான அர்த்தமும் செய்திலர் மத்வாசாரியர். நம் ஸ்வாமியோ வென்னில், 'வித்யாவிநயஸம்பந்நே' என்பதைத் தனி விசேஷ்யமாகவும் 'ப்ராஹ்மணே' என்பதைத் தனி விசேஷ்யமாகவுங்கொண்டு பாஷ்யமிட்டருளினார். வித்யாவிநய ஸம்பந்நனான உத்தம ப்ராஹ்மணனொருவன்; அவனிடத்திலும், அவையொன்றுமில்லாத கேவல ப்ராஹ்மண னொருவன்; அவனிடத்திலும் என்று இரண்டு வார்த்தையாக ஸ்வாமி திருவுள்ளம் பற்றினபடி. இதுதான் மிகவும் உசிதமானதென்று தாத்பர்ய சந்த்ரிகையில் நன்கு காட்டப்பட்டிருக்கிறது. எங்ஙனே யென்னில், கவி, ஹஸ்திநி, சுநி, ச்வபாகே என்று மேலுள்ளவற்றில் ஒரு விசேஷணமுமிடப்படவில்லை. அப்படியிருக்க ப்ராஹ்மணே விசேஷணாவச்யகதையில்லை. அன்றியும், வித்யாவிநயஸம்பந்ந ப்ராஹ்மணனைச் சொல்லி இவனுக்கு எதிரிடையான நபரை நிர்தேசியாமலிருப்பது குறையுமாகும். ஆகவே வித்யா விநய ஸம்பந்தனிடத்திலும் கேவல ப்ராஹ்மணனிடத்திலும் என்றுதான் பொருள் கொள்ளப் பொருந்தும் என்று. இந்த ச்லோகத்தில் “பண்டிதாஸ் ஸமதர்சிந:” என்றிருப்பது கொண்டு, 'ஜாதிபேதம் முதலானவற்றை யிட்டு ஏற்றத்தாழ்வு காண்பவர்கள் பண்டிதர்களல்லர், பாமரர்களே' என்கிற அபார்த்தம் நவீந ஸம்ஸ்காரகர்களின் வாக்கில் உலாவி வருகிறது. அது சிறிதும் பொருந்தாது. "பண்டிதா:- ஆத்மயாதாத்ம்யவித:, ஜ்ஞானைகாசாரதயா ஸர்வத்ர சமதர்சிந; விஷமாகாரஸ்து ப்ரக்ருதே: நாத்மந:, ஆத்மா து ஸர்வத்ர ஜ்ஞாநைகாகாரதயா ஸம இதி பச்யந்தீத்யர்த்த:” என்பது பாஷ்யஸூக்தி. பசுவினாலாகிற காரியம் யானையினாலாகாது, யானையினாலாகிற காரியம் பசுவினாலாகாது பால்வேண்டும் போது பசுவைத் தேடுவதும் மஹோத்ஸவங்களுக்கு யானையைத் தேடுவதும் யாவரிடத்துங் கண்டவியல்பு. "கவி ஹஸ்திநி ஸமதர்சனம்” லோகவ்யவஹார ரீதியில் எங்ஙனே பண்ணமுடியும்? 'ஸர்வத்ர ஸமதர்சிந:' என்றதற்கு நவீநர்கள் சொல்லுகிற பொருள் பொருந்தவேணுமாகில், யானைக்குச் செய்கிற அலங்காரங்களை நாய்க்குச் செய்யவேண்டும்; நாய்க்குச் செய்யுமவற்றைக் குதிரைக் செய்யவேண்டும். இப்படிப்பட்ட ஆபத்திகளைப் பரிஹரிக்கைக்காக 'ஸர்வத்ர தர்சிந:' என்பதற்குப் பொருத்தமான பொருள் காணவேண்டும். அதுதான் பாஷ்யத்தில் காண்பது. அன்றியும், இதற்குமேல் மூன்றாவது ச்லோகத்தில் (5-20) என்று “ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம்" என்று சொல்லப்பட்டிருக்கின் றது. ப்ரியமானது கிடைத்தால் ஸந்தோஷிக்கக்கூடாது; அப்ரியமானது கிடைத்தால் வெறுப்புக்கொள்ளலாகாது என்று இதற்குப் பொருள். இப்படியிருக்கவல்லவனுக்குத்தான் ஸர்வத்ர ஸமதர்சந ரூபமான ஜ்ஞாநவிபாக முண்டாகுமென்று பாஷ்யகாரர் அருளிச் செய்கிறார். அப்படிப்பட்ட ஓர் அதிகாரி தேறுவனாகில் அவனுடைய ஸர்வத்ரஸமதர்சித்வம் எப்படிப்பட்ட தென்று நேராகக் கண்டு கொள்ளலாம்.
44. (6-5) "உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத், ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மந:" என்கிற விந்த ச்லோகம் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் அநவரதமும் ஊன்றியிருக்கத்தக்கது. தன்னைக்கொண்டே தான் கடைத்தேறவேணுமென்றும், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளலாகா தென்றும், தனக்குத் தானே உறவு, தனக்குத்தானே பகைவன் என்றும் இந்த லோகத்தில் சொல்லப்படுகிறது. ஒருவன் கடைத்தேறுவதற்குப் பல பல ஸாதனங்கள் வேண்டியிருக்கின்றன. ஸத்ஸஹவாஸம் வேணும், ஆசார்யோபஸேவை வேணும், பிராட்டியை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றுதல் வேணும்......... என்றிப்படியாக உஜ்ஜீவனத்திற்கு வேண்டியவை பல இருந்தாலும் இவற்றுள் மிக முக்கியமான ஸாதனம் மனம் ஒன்றேயாம். அதை விஷயாந்தரங்களில் யதேஷ்டமாகச் செல்லவிட்டு வைத்தால் அது தன்னைத்தானே மாய்த்துக் கொண்டபடியாகும். மனத்தை விஷயக்ராமங்களில் புகவிடாமல் ஆத்மோஜ் ஜீவனத்திற்கு அபிமுகமாக்குமளவில் அந்த மனத்தைக்கொண்டு தான் வாழ்ந்தவனாவன். ஆகவே, மனமானது உறவாயு மிருக்கும், பகையாயு மிருக்கும். உறவாகக்கொண்டு வாழ்வதே விவேகிகளின் பணி; பகையாகக்கொண்டு பாழாய்ப் போக வேண்டாமென்று கீதாசார்யன் வெகு பொருத்தமாக உபதேசித்தருளுகின்றான். ஆனதுபற்றியே ஆழ்வார்கள் அடிக்கடி நெஞ்சைக் கொண்டாடுகிறார்கள்; *நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றாலென் செய்யோம், இனி யென்ன குறைவினம்?* என்றும். ஊனில்வாழுயிரே ! நல்லை போவுன்னைப் பெற்று* என்றும் *முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே! இயற்றுவா யெம்மொடு நீ கூடி* என்றும் நம்மாழ்வாரருளிச் செய்கிறார். ஆனால் நெஞ்சை அனுகூலமாக்கிக் கொள்வதென்பது மிகவும் அரிதான செயல். *நின்றவாநில்லா நெஞ்சினையுடையேன் என் செய்கேன்" என்கிறார் திருமங்கையாழ்வார். அதுநிற்க, ஜிதேந்த்ரியரில் தலைவனான அர்ஜுனனே மனத்தை வசப்படுத்த வேணுமென்று அடிக்கடி கூறுகின்ற கண்ண பிரானை நோக்கிச் சொல்லுகிறான்-(6-34.) “சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண! ப்ரமாதி பலவத் திருடம், தஸ்யாஹம் நிக்ரஹம் மத்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்." என்கிறான். கண்ணா! காற்றைப் பிடித்துக் கரகத்தினுள்ளே அடைக்கவேணுமென்னுமா போலே மனத்தைப் பிடித்து நிலை நிறுத்த வேணுமென்கிறாய் நீ; மனமோ இயற்கையாகவே சஞ்சலமானது. ஒரு நொடிப் பொழுதுகூட ஒரு விஷயத்தில் ஏகாக்ரமாக ஒருவனாலும் நிலைநிறுத்த முடியாது; விஷயாந்தரங்களிலுங்கூட ஒன்றில் ஒன்றிநிற்க மாட்டாத நெஞ்சை நல்விஷயத்தில் ஒன்றவைப்பதென்பது மிகவுமரிது என்று நான் நினைக்கிறேன்; மநோநிக்ரஹத்திற்குரிய உபாயத்தை உரைக்கவேணும் என்றான் அர்ஜுநன். இதற்குக் கண்ணபிரான் கூறிய மறுமொழி என்னவென்று பார்த்தாலோ, (6-35) “அஸம்சயம் மஹாபாஹோ! மநோ துர்நிக்ரஹம் சலம், அப்யாஸேநது கௌந்தேய! வைராக்யேண ச க்ருஹ்யதே.” என்பதுதான் கண்ணனுடைய மறுமாற்றம். மனத்திற்கு சஞ்சலத்வம் இயற்கைக் குணமாதலால் அதைப் போக்க அதனை ஒன்றில் ஒன்றவைப்பதென்பது முடியாத காரியந்தான்; இதில் ஸந்தேஹமே யில்லை; ஆனாலும் விஷயதோஷங்களைக் காணக்காண வைராக்ய முண்டாகக் கூடு மாதலால் மனத்தை யடக்கப் பழக்கம் செய்து நாளடைவில் ஸாதிக்கவேணும். என்பது கண்ணனுடைய பதில். இவ்விடத்தில் "அஸம்சயம்" என்பதற்கு சங்கர பாஷ்யம் "நாஸ்தி ஸம்சயோ ஹி மஹாபாஹோ! மநோ துர்நிக்ரஹம் சலம் மித்யத்ர,'' என்றுள்ளது; அப்படியன்றிக்கே தாத்பர்ய சந்த்ரிகையில் அஸம்சய மித்யேதத் ஸத்யமிதிவத் அர்த்தாங்கீகாரபரம்" என்றுள்ளது ரஸிக்கத்தக்கது.
45. இனி ஏழாவது அத்யாயத்திற் செல்வோம். இவ்வத்யாயத்தை யிட்டு கீதைக்கு ஒரு அபக்க்யாதி விளைந்திருப்பதுண்டு; ஓரூரில் ஒரு பண்டிதர் கீதா ப்ரவசனம் செய்து கொண்டிருந்தாராம். பலர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவர் மாத்திரம் அந்த கோஷ்டியில் அந்வயிப்பதில்லை. ஆப்தர்கள் அவரை வெகு நிர்ப்பந்தித்து ஒருநாள் கீதாகாலக்ஷேபகோஷ்டியில் அந்வயிப்பித்தார்கள். அவர் வந்து சேர்ந்த தினத்தில் ஏழாமத்யாயத்தில் பதினைந்தாம் ச்லோகம் ஆரம்பிக்கப்பட்ட தாம், அதாவது—"ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நரா தமா:, மாயயா பஹ்ருதஜ்ஞாநா: ஆஸுரம் பாவமாச்ரிதா:" என்பது. இந்த ச்லோகம் முழுவதும் நிந்தையே நிறைந்திருப்பதால் பாஷ்யாதிகளையும் அநுஸரித்து அந்த நிந்தைகளை வெகு விரிவாக உபந்யளித்தார் ப்ரவசநகாரர். அன்றே புதிதாகக் கேட்க வந்தவர் இந்த கீதையில் இப்படிப்பட்ட நிந்தைகள்தாம் நிறைந்திருப்பன போலும் என்றெண்ணி மிகவும் வெறுப்படைந்தாராம். மறுநாளும் 'இன்றைக்கு விஷயம் எப்படி யிருக்கிறது பார்ப்போம்' என்று பரீக்ஷார்த்தமாகக் காலக்ஷேப கோஷ்டிக்கு வந்தாராம்: அன்று அதற்கடுத்த சுலோகம் (7-16.) “சதுர்விதா பஜந்தே மாம் ஐநாஸ் ஸுக்ருதிநோர்ஜுந. ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப.” என்பது விரிவாக உபந்யளிக்கப்பட்டதாம். முன் ச்லோகத்தில் நிந்தை நிறைந்தது; இந்த ஶ்லோகத்தில் ஸ்துதி நிறைந்தது. இரண்டும் பிசகுதானே. அதனால் அந்த ச்ரோதா, ‘கீதையில் வீணான நிந்தையும் ஸ்துதியும் தவிர வேறு கிடையாது’ என்று முடிவு செய்து கொண்டு மூன்றாநாள் தொடங்கிக் காலக்ஷேபத்திற்கு வருவதை நிறுத்திக் கொண்டாராம். ஏன் வருவதில்லை யென்று கேட்பவர்களுக்கு "கீதையில் என்ன இருக்கிறது! பரநிந்தை பத்தத்யாயம்; ஆத்மஸ்துதி ஆறத்யாயம்; இன்னு மேதாவது விஷயங்கள் இரண்டத்யாய மிருக்கும்." என்றாராம். இது இவருடைய மருள் இருந்தபடி. திருவாய்மொழியில் (3-5) *மொய்ம்மாம்பூம்பொழிற் பொய்கைப் பதிகமும் இந்த ஏழாமத்யாயமும் ஒரு நிகராக நினைக்கப்படலாம். அப்பதிகத்தின் ஸாரத்தை நூற்றந்தாதியிலருளிச் செய்த மணவாள மாமுனிகள் “அன்பாலாட் செய்பவரை யாதரித்தும், அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்” என்கிறார். நிந்திக்க வேண்டியவர்களை நிந்திப்பதும் ஸ்துதிக்க வேண்டியவர்களை ஸ்துதிப்பதும் ப்ராப்தந்தானே. அது நிற்க. "சதுர்விதா பஜந்தே மாம்” என்கிற ச்லோகத்தில் ஆர்த்த:, ஜிஜ்ஞாஸு:, அர்த்தார்த்தீ, ஜ்ஞாநீ என்று நால் வகை யதிகாரிகள் கூறப்படுகிறார்கள். இவர்களை விவரிக்கின்ற சங்கராசார்யர் தமது பாஷ்யத்தில் “ஆர்த்த: -- தஸ்கரவ்யாக்ரரோகாதிநா அபிபூத: ஆபந்ந: , ஜிஜ்ஞாஸு: —பகவத்தத்வம் ஜ்ஞாதுமிச்சதி ய: . அர்த்தார்த்தீ-தநகாம:. ஜ்ஞாநீ- விஷ்ணோஸ்தத்வவித்." என்று எழுதியுள்ளார். தீர்த்தர் ஒரு விவரணமு மெழுதவில்லை. சங்கராசாரியர்-திருடர் புலி பிணி முதலியவற்றால் துன்படைந்தவனை ஆர்த்தனென்றும், பகவானையறிய விரும்புகிறவனை விஜ்ஞாஸுவென்றும், தனம் பெற விரும்புமவனை அர்த்தார்த்தி யென்றும், விஷ்ணுதத்த்வமறிந்தவனை ஞானி யென்றும் விவரித்திருக்கின்றார். நமது பாஷ்ய காரரான ஸ்வாமி யெம்பெருமானார், -ப்ரஷ்டைச்வர்ய காமனை ஆர்த்த னென்றும், அபூர்வைச்வர்யகாமனை அர்த்தார்த்தி யென்றும், கைவல்ய காமனை ஜிஜ்ஞாஸு வென்றும், ஸ்வஸ்வரூபமுணர்ந்தவனை ஞானியென்றும் விவரித்தருளுகிறார். இவற்றுள் எந்த விவரணத்தில் பொருத்தமுள்ளதென்பதைப்பற்றி நாம் இங்கு விமர்சிக்க விரும்பவில்லை. இங்ஙனே விலக்ஷணமான விவரணத்தை நம் ஸ்வாமி செய்தருளியதற்கு மூலமென்ன? என்று விமர்சிக்க ப்ராப்தம். இதை விமர்சிக்குமளவில், ஆழ்வார்களின் ஸ்ரீ ஸூக்தியை அடி யொற்றிப் பேசவேணு மென்று ஸ்வாமி கொண்டிருந்த உறுதிதான் இதற்கு மூலமென்று நன்கு புலப்படும். திருப்பல்லாண்டில், *வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல்* என்கிற பாசுரத்தினால் ஞானிகளை யழைத்தும், *ஏடுநிலத்திலிடுவதன் முன்ன* மென்கிற பாசுரத்தினால் கைவல்யார்த்திகளை யழைத்தும், *அண்டக்குலத்துக் கதிபதியாகி* யென்கிற பாசுரத்தினால் அபூர்வைச்வரிய காமர்களையும் ப்ரஷ்டைச்வர்ய காமர்களையு மழைத்தும் உபதேசம் தந்தருளியிருப்பது ஸுஸ்பஷ்டம். இதுவன்றியும் திருவாய்மொழியில் *ஒருநாயகமாய்* என்கிற பதிகத்தில் இந்நால்வகை யதிகாரிகளும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் ப்ரஸித்தம். கீதையிலுள்ள *சதுர்விதா பஜந்தே மாம்* என்னுமிந்த ச்லோகத்தை யடி யொற்றியே அந்தப் பாசுரங்கள் திருவவதரித்தனவாக ஸம்ப்ரதாய மாகையாலே* மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தவரான ஸ்வாமி யெம்பெருமானார் திவ்ய ப்ரபந்தச் சாயையிலேயே அருளிச்செய்தாரென்பது இங்குக் குறிக்கொள்ள வேண்டிய பரமார்த்தம்.
மற்றுமொரு விசேஷமிங்கு நெஞ்சிற் பதிய வைத்துக் கொள்ளத்தக்கதுண்டு. ஸ்ரீவசன பூஷணத்தில் (73) “அஹமர்த்தத்துக்கு ஜ்ஞாநாநந்தங்கள் தடஸ்தமென்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம்" என்ற சூர்ணையின் வியாக்கியானத்தில்- திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆழ்வான் ஆறுமாஸம் ஸேவித்து நின்று மஹாநிதியாகப்பெற்ற அர்த்த மிறேயிது" என்று மணவாளமாமுனிகள் அருளிச் செய்கிறார். எம்பெருமானார் கோஷ்டியில் ஒருநாள் 'ஜீவாத்மாவுக்கு அந்தரங்க நிரூபகம் ஜ்ஞாத்ருத்வமா? சேஷத்வமா?' என்று விசாரமுண்டாக, எம்பெருமானார் கூரத்தாழ்வானைத் திருக்கோட்டியூர் நம்பி பக்கலில் விடை கொண்டு இதையறிந்து வருமாறு நியமித்தருள, ஆழ்வான் அப்படியே விடை கொண்டு ஆறுமாஸம் ஸேவித்திருந்து சேஷத்வமே அந்தரங்க நிரூபகமென்று தெளிந்து மீண்டதாக ஐதிஹ்யமுள்ளது. அப்படி மஹாநிதியாகப் பெற்று வந்த மஹார்த்தத்தை ஸ்வாமி யெம்பெருமானார் எவ்விடத்திலாவது பதிய வைத்திருப்பதுண்டோ வென்று சிலர் கேட்பதுண்டு. அவர்களுக்குச் சொல்லுகிறோம்; *சதுர் விதா பஜந்தே மாம்* என்கிற இந்த கீதா ச்லோகத்தின் பாஷ்யத்தில் ஜ்ஞாநீ என்பதற்கு அர்த்தம் செய்தருளு மிடத்து "ஜ்ஞாநீ ச-'இதஸ்த் வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்' இத்யாதிநா அபிஹித பகவச்சேஷதைகரஸாத்மஸ்வரூபவித்" என்றருளியுள்ளார். விஷ்ணுதத்த்வத்தை யறிந்தவனை ஜ்ஞாநி யென்றார் சங்கராசாரியர்; ஜீவாத்மஸ்வரூபத்தை யறிந்தவனை ஜ்ஞாநியென்கிறார் நம் ஸ்வாமி. அந்த ஜீவாத்மாவுக்கு விசேணமிடுகிறார் [பகவச்சேஷதைகரஸ] என்று. ப்ரஹ்மஸூத்ரகாரர் “ஜ்ஞோத ஏவ” என்கிற ஸூத்ரத்தினால் ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வத்தை ஸ்தாபித்திருக்கிறார். ஜ்ஞாதா என்பதற்கு ‘அறியுமவன்' என்று பொருள். எதை அறியுமவன்? என்று கேள்வி வரில், தான் பகவச்சேஷபூதன் என்பதை யறியுமவன் என்று பொருள் சொல்ல வேண்டு மென்பது ஸ்வாமி திருவுள்ளம் போலும். "பகவச்சேஷதைகரஸாத்ம ஸ்வரூப” என்னும் சொல்தொடர் இதரர்களின் க்ரந்தங்களொன்றிலும் வர்ஷசதம் தேடினாலும் கிடைக்கமாட்டாது. இப்படி விலக்ஷணமான ஸ்ரீ ஸூக்தியை அஸக்ருத் அருளிச் செய்திருக்கின்ற நம் ஸ்வாமி, திருக்கோட்டியூர் நம்பி பக்கலில் நின்றும் ஆழ்வான் கொணர்ந்த நிதியைப் பெற்றவரென்பதில் ஸந்தேஹமுண்டோ?
இதற்கடுத்த (7-17.) *தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த:* என்னும் ச்லோகத்தின் உத்தரார்த்தம் “ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:' என்றுள்ளது. இங்கு நம் ஸ்வாமி "ஜ்ஞாநிந: அஹம் அத்யர்த்தம் ப்ரிய:” என்று க்ரமாந் வயத்தையே திருவுள்ளம்பற்றி பாஷ்யமிட்டருளினார். இவ்வந்வயக்ரமத்தில் ஞானிக்குத் தன்னிடத்தில் ப்ரீதி அதிகம் என்றதாக விளங்குகிறது. உண்மையில், பகவானிடத்தில் ஞானி வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்கு மளவில் ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதிதான் அதிக மென்னத் தகும். ஆகவே இந்த ச்லோகத்தில் [அத்யர்த்தம்] என்பதை “அஹம் ப்ரிய:' என்பதிலே கூட்டுவதை விட மம ப்ரிய" என்பதில் கூட்டுவதுதான் ரஸவத்தரமென்று திருவுள்ளம் பற்றின ஸ்வாமி ஸ்ரீபாஷ்யத்தில் சரமஸூத்ரமான *அநாவ்ருத்தி ஸூத்ரத்தின் பாஷ்யத்தில் “அயர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்கிற அநர்க்கமான வாக்யத்தினால் அந்த அந்வய க்ரமத்தையும் காட்டியருளினார். அந்த ஸ்ரீபாஷ்ய ஸூக்தியின்படி ப்ரக்குத கீதாச்லோகாந்வயம் எப்படி கொள்ளவேணு மென்னில்; "ஜ்ஞாநிந: அஹம் ப்ரிய:; ஸ ச மம அத்யர்த்தம் ப்ரிய:" என்றிங்ஙனே கொள்ளவேணும்.