பகவத் கீதை

अथवा बहुनैतेन किं ज्ञानेन तवार्जुन ।
विष्टभ्‍याहमिदं कृत्‍स्‍नमेकांशेन स्थितो जगत् ॥ ४२॥
அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந |
விஷ்டப்யாஹம் இதம் க்ருத்ஸ்நம் ஏகாம்சேந ஸ்த்திதோ ஜகத் ||     10.42

அர்ஜுன! அதிகமாகக் சொல்லுவானேன்? இவ்வுலகிலுள்ளவை எல்லாம் ஒன்று விடாமல் என் நியமனத்திற்கு (என் ஆளுகைக்கு) உட்பட்டவைகளே. என் சக்தியின் ஒரு சிறு பகுதியினாலேயே நான் இவ்வுலகனைத்தும் படைத்து, அவைகளுள் பரந்திருந்து, அவைகளை தரித்து நியமித்து ஆள்கிறேன்.

அர்ஜுன! நீ அறிய வேண்டியவை இன்னும் பல உண்டு; முக்கியமாக நீ அறிய வேண்டியது யாதெனில், பிரளய காலத்தில் எல்லா சித் அசித்துக்களும் பெயர் வடிவங்களை இழந்து தமஸ்ஸில் ஒன்றி, நுட்பமாய் என்னிடம் அடங்கியிருக்கின்றன. அக்காலத்திலும் நான் அவைகளில் பரந்திருக்கிறேன். சிருஷ்டிகாலம் வந்ததும் அவைகளை மறுபடியும் முன் போலவே என் ஸங்கல்பத்தினாலே, பெயர் வடிவங்களுடன் படைக்கிறேன். இந்த ஸ்தூல சரீரங்களிலும் (பருஉடலிலும்) நான் அவைகளில் பரந்திருக்கிறேன். இப்படி எல்லாக் காலத்திலும் நான் அவைகளில் ஆத்மாவாயிருந்து, அவைகளை தரித்து, நியமித்து நடத்திப் போருகிறேன்; இப்படி என்னால் ஆளப்படும் எல்லாப் பொருள்களும் என் விபூதி; என் சொத்து. என் விபூதியில் சேராத வஸ்து எக்காலத்திலும் எவ்விடத்திலும் எதுவுமில்லை என்பதை நீ அறிவாயாக என்கிறான் கண்ணன்.

ஸ்ரீ ஆளவந்தார் அருளிய கீதார்த்த ஸங்க்ரஹம்

स्वकल्याण गुणानन्त्य कुरा स्वाधीनतामतिः ।
भक्त्युत्पत्तिविवृद्धयर्थं विस्तीर्ण दशमोंदिता ॥ १४ ॥

கீழே சொன்ன பக்தி உண்டாகும் வகையையும், அதன் வளர்ச்சியையும், தன் கல்யாண குணங்கள் எண்ணிறந்தவை என்பதையும், எல்லாம் தனக்கு அதீனம் என்பதையும் விரிவாக இந்த பத்தாம் அத்தியாயத்தில் கண்ணன் அருளிச் செய்துள்ளான்.

ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்!

பத்தாம் அத்யாயம்- விபூதியோகம் முற்றிற்று

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top