பகவத் கீதை

केशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥ ५ ॥

க்லேசோzதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம் |
அவ்யக்தா ஹி கதிர் துக்கம் தேஹவத்பிரவாப்யதே ||        12.5

எவர்கள் காணத்தகாததாயும், சிந்திக்க முடியாததாயும், எல்லா உடல்களிலும் ஒரே மாதிரி உள்ளதாயும், மாறுதல் இல்லாததாயும், நித்யமாயும் இருக்கிற ஜீவாத்மாவை, புலன்களை விஷயங்களினின்றும் அடக்கி, எல்லா ஆத்மாக்களிலும் சமபுத்தி பண்ணி எல்லா உயிர்களின் நன்மையே விரும்பினவர்களாய் உபாஸிக்கிறார்களோ (அதாவது ஆத்ம சிந்தனை செய்கிறார்களோ) அவர்கள் என்னையே (எனக்கு ஸமானமான பரிசுத்த ஜீவனையே) அடைகிறார்கள்.

கண்களால் காண முடியாததும், மனத்தினால் சிந்திக்க அரிதாயுமுள்ள ஜீவாத்ம சிந்தனம் கஷ்டம், சரீரத்தையே ஆத்மாவாக அபிமானித்திருக்கும் அவர்களுக்கு அறிய முடியாத ஆத்ம சிந்தனம் எளிதில் கைகூடுவதல்ல.

ஸர்வேச்வரனே அறப்பெரியோன் எல்லா கல்யாண குணங்களுடையவன், நம்மை படைத்துக் காப்பதில் மிக்க அறிவு ஆற்றல் படைத்தவன் என்பது இயல்பாகவே எல்லோருக்கும் தெரியும். அவனை செளந்தர்ய லாவண்ய தேஜஸ்ஸான ஓர் உருவம் படைத்தவன். அவனைக் கண்டு, பற்றி அவனிடம் பக்தியோகம் செய்து அவனை அடைவது சுலபம் என்பதை முதல் சுலோகத்தில் கூறினான் கண்ணன்.

இந்த மூன்று சுலோகங்களில் ஆத்ம சிந்தனம் செய்வது மிகவும் கஷ்டமானது என்பதை விளக்குகிறான். ஜீவன் கண்ணுக்குத் தோன்றாதவன். அணு ஸ்வரூபன். ஓர் உருவமிருந்து மனத்தினால் சிந்திக்கவும் கோசரமல்லன். அநேக காலம் உப்பில் ஊறின ஊறுகாய் போல், இந்த உடலே ஆத்மா என்ற எண்ணத்தில் நாம் ஊறி, நம் சரீரத்தையே போர பொலிய போஷித்து ரக்ஷித்து வருகிறோம். இந்த உடலைக் காட்டிலும் வேறொரு ஜீவன் உண்டு; அவன் நித்யன், அழிவில்லாதவன், உடலைப்போல் மாறுதலற்றவன், ஜ்ஞான ஸ்வரூபன் என்பதை அறிந்து அவனை மனத்தினால் சிந்தனை செய்வது என்பது மிகவும் அரிது; இன்னும் பக்தி செய்து பகவானை விரைவிலேயே கைக்கூடும். ஆத்ம சிந்தனம் செய்து, பகவானை அடைவது என்பது வெகு காலதாமதமாகும்.

ஆதலால் சுலபமாகச் சென்று விரைவில் பயன் பெறக்கூடிய பக்தியோகமே மேன்பட்டது என்பது என் கருத்து என்கிறான் கண்ணன்,

இங்கே அக்ஷரம் என்கிற பதம் ஜீவாத்மாவையே சொல்லுகிறது. மேலே பதினைந்தாம் அத்யாயத்தில் பத்தஜீவனை க்ஷரம் என்றதினாலும் பரிசுத்த ஜீவனை அக்ஷரம் என்கிற பதத்தினாலும் “த்வாவிமௌ புருஷோ லோகே க்ஷர அக்ஷர ஏவச" என்பதினால் சொல்லியிருக்கிறான்; ஆதலால் இங்கும் அக்ஷரம் என்பதினால் பரிசுத்த ஜீவனை அடைகிறான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top