பகவத் கீதை

इन्द्रियार्थेषु वैराग्यमनहङ्कार एव च ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥ १३.९ ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அஹங்கார ஏவச |
ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி துக்க தோஷாநு தர்சனம் ||        13.9

தற்புகழ்ச்சியின்மை, டம்பமின்மை, அஹிம்ஸை, பொறுமை, நேர்மை, தரு ஸேவை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம், விஷயங்களில் வைராக்யம், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி இவைகளிலுள்ள துன்பத்தை அறிதல், போன்றவையும் -- மனைவி மக்கள் வீடு வாசல் தனம் இவைகளில் பற்றுதல் இல்லாமை, சுகம், துக்கம், விருப்பம், வெறுப்பு இவைகளில் சமநிலையில் மனத்தை நிறுத்துதல் - மற்றவை துறந்து பகவானையே சிந்தித்திருத்தல், ஜனக்கூட்டமில்லாத தனி இடத்தை நாடி, ஆத்ம பரமாத்ம ஜ்ஞானத்திலேயே நிலைத்திருத்தல், உண்மைப் பொருளை ஆராய்ச்சி செய்தல் முதலான குணங்களே, ஆத்ம நன்மையை பயக்கக் கூடியவை.

அமாநித்வம் -- பெரியோரை அவமதித்து தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல் கூடாது.

அதம்பித்வம் -- மற்றவர் நம்மை புகழ்வதற்காக ஒரு நற்செயலைச் செய்கிற தம்பம் கூடாது.

அஹிம்ஸா --- உலகிலுள்ளவை எல்லாம் பகவத் விபூதி; பகவானுடைய சொத்து என்பதை அறிந்து, எதற்கும் மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் ஒரு தீங்கையும் நினைத்தலோ சொல்லுதலோ செய்தலோ கூடாது.

சாந்தி –பொறுமை - ஒருவர் தம்மை சொல்லத்தகாத சொல்லைக் கூறி நிந்தித்தாலும், துன்புறுத்தும் செயலைச் செய்தாலும் கூட, அவர் பக்கல் வெறுப்புக் கொள்ளாமல் சாந்தி (அமைதி) யாயிருக்க வேண்டும்.

ஆர்ஜவம்– கபடமின்மை: மெய், நா,மனத்தால் ஒருபடிப் பட்டிருக்க வேண்டும்.

ஆசார்ய உபாஸனம் – ஜீவபர ஸ்வரூபத்தை நமக்கு உபதேசித்தவனே ஆசார்யனாகிறான். மந்திர மந்திரார்த்தங்களை உபதேசித்த, ஆசாரியனிடம் நன்றியுள்ளவனாய், அவனை வணங்குதல், அவனுக்குத் தொண்டுசெய்தல், தெரியாத பொருளை அவனிடம் கேட்டறிதல் இவையே ஆசார்ய உபாஸனமாகும்.

ஸௌசம் – தூய்மை: பொதுவாக மண் ஜலம் சம்பந்தத்தால் ஏற்படும் சுத்தியே ஸௌசம் எனப்படும். ஆனால் மனத்திற்கும், வாக்குக்கும் தூய்மை உண்டு. பிறருக்குத் தீங்கு நினையாமை, பகவானையே நினைத்திருத்தல், ஆபாஸ விஷயங்களில் ஆசையின்மை அது கிடையாவிடில் த்வேஷமில்லாதிருத்தல், இவையெல்லாம் மனத்திற்குத் தூய்மை. பிறர் குற்றங்களை நம் வாயினால் சொல்லாமல், பொய் சொல்லாமல் பகவந் நாமங்களையே வாயினால் சொல்லுதல் இவையெல்லாம் வாய்க்குத் தூய்மையாகும் பகவானுக்கு அர்ப்பணம் செய்யாத எப்பொருளையும் கண்ட கண்ட இடங்களில் புசித்தல் கூடாது; அப்படி புசித்தால் அவன் பாபத் தையே புசிக்கிறான் என்கிறது சாஸ்திரம்.

ஸ்தைர்யம் – மனமும் புத்தியும் பகவானிடமே நிலைத்திருத்தல் வேண்டும்.

ஆத்ம விநிக்ரஹம் – மனத்தை அடக்குதல். மற்ற விஷயங்களில் போகாமல் மனத்தை அடக்கி எப்போதும் ஸர்வேசுவரனையே நினைத்திருத்தல் வேண்டும்.

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் – புலன்களிடம் வெறுப்பு உண்டாக வேண்டும்; அவைகள் உலக விஷயங்களில் போகாமல் தடுக்க வேண்டும்.

அஹங்கார – ''நான், என்னுடையது" என்னும் அஹங்காரம் தொலைய வேண்டும்."நீர், நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து'" என்பது நம்மாழ்வாரின் உபதேசம். 'ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய’ என்று இருந்த பரதனைப் போல, எல்லாம் பகவானுடையது என்றிருக்க வேண்டும்.

ஜந்மம், ம்ருத்யு,ஜரை, வியாதி துக்கம் தோஷானு தரிசனம் – ஒரு ஸ்திரீயின் குக்ஷியில் கர்ப்ப வாசம் செய்வதும் கஷ்டம், பூமியில் பிறப்பதும் கஷ்டம், சில காலம் இந்த பூமியில் வாழ்வதும் துன்பமே, மூப்பு, மற்றும் வியாதிகள் இவையெல்லாம் துன்பகரமாகவேயிருக்கும். "இடி விழுந்தாற் போல் ஜரை” என்கிறார் நம்பிள்ளை. இவைகள் எல்லாவற்றையும் காட்டில் மரணாவஸ்தை என்பது மிகக் கஷ்டமாகவே யிருக்கும்.

இவைகளை அடிக்கடி நினைத்துப் பார்த்து, "இருள் தருமா ஞாலத்தில் இனிப் பிறவி யான் வேண்டேன்" என்கிற ஆழ்வார் நிலை வர வேண்டும். இனி நமக்கு கர்ப்பவாஸம் பிறப்பு, சம்சார பந்தம், இறப்பு, இவை கூடாது என்று இவைகளில் வைராக்யம் வர வேண்டும்; அதற்குச் சேர நல்ல நடத்தை உள்ளவனாக இருக்க வேண்டும்.

புத்ர தாரா க்ரஹாதிஷு அஸக்தி: அபிஸங்க: மனைவி, மக்கள், வீடு, மனை இவைகளில் அதிகமான ஸ்நேகமும், அதிகமான அபிமானமும் கூடாது; சம்சாரத்திலிருப்பவனுக்கு இவைகளை அறவே விடமுடியாது; ஆனால் இவையே புருஷார்த்தம், பிறவியின் பயன் என்று இருக்கக்கூடாது.

நித்யஞ்ச, ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு -- நமக்குப் பிரியமானது கிடைத்தாலும், நாம் விரும்பாதவை வந்தாலும் இரண்டையும் எப்போதும் சமமாக நினைக்க வேண்டும். நம் முற்பிறவியின் கர்மாவுக்குத் தக்கபடி அவை வந்து போகின்றன என்று எண்ண வேண்டும். சந்தன மலர் போன்றவை கிடைத்தால் சந்தோஷமும், முள், பாம்பு இவைகளில் வெறுப்பும் கூடாது.

இதற்கு மேல் பகவானான தன்னிடம் பக்தி செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறான் கண்ணன்.

மயிச அநந்ய யோகந - பகவானிடம் செய்யும் அன்பே, பக்தி எனப்படும். இதைச் செய்யும்போது மற்ற விஷயங்களில் பற்றுதலில்லாமல், அவன் ஒருவனிடமே அன்பைச் செய்ய வேண்டும்.

அவ்யபிசாரிணி பக்தி - பகவானைத் தவிரவேறு பலனை விரும்பியோ, தனக்காகவோ பகவத் பக்தி செய்வது விபசார தோஷமாகும். அப்படிக்கில்லாமல் பகவான் ஒருவனிடமே, அவனை அடைவதே பலனாக நினைத்து, பக்தியைச் செய்ய வேண்டும்.

இதற்கு நல் அறிவு வேண்டும். இதைப்பெற “விவிக்த தேச ஸேவித்வம்....” அதிகமாக மனித ஸஞ்சாரமில்லாமலிருக்கும் இடத்திலிருந்து, ஆத்மஜ்ஞான நித்யத்வம் – ஆத்மாவின் உண்மையான ஸ்வரூப ஞானத்தில் நிலைத்திருப்பதே, ஏதத் ஞான இதி ப்ரோக்தம் – சரியான ஜ்ஞானம் (அறிவு) என்று சொல்லப்படும். அந்யதா யததோ அக்ஞானம் -- இதற்குப்புறம்பானவை ஜ்ஞானமாகாது; அறிவின்மையாம். அதாவது நமக்கு ஆத்ம நன்மையை தரக்கூடிய அறிவு இதுவேயாகும்.

“அரிது அரிது மானிடர் ஆதல்” என்று கூறியுள்ளது போல, அநேகப்பிறவியின் புண்ணியப் பயனாக ஒரு ஜீவாத்மாவுக்கு மனிதப் பிறவி கிடைக்கிறது. மனிதனுக்குப் பகவான் அறிவு ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். இதை வீணாக்காமல் நாம் பகவத் பக்தியைச் செய்து மறுபிறவியில்லா ஆத்ம நன்மையைப் பெற முயலவேண்டும்.

மிருகம், பறவை, ஈ, எறும்பு, செடி, கொடி போன்ற மற்ற எல்லாப் பிறவியிலும் கிடைக்கக் கூடிய இழிந்த விஷயமான காமம் க்ரோதங்களை அனுபவிக்க நாம் மனிதப் பிறவி எடுக்க வேண்டும் என்பதில்லை; அவை எல்லாப் பிறவிகளிலும் கிடைக்கக் கூடியவையே: மலைகளிலும் ஆண்மலை பெண்மலை என்றும் மரங்களிலும் ஆண்மரம் பெண்மரம் என்றும் உண்டு.

அரணிக்கட்டையிலிருந்து உண்டாகும் நெருப்பு அந்தக்கட்டையை அழித்து விடுமாப்போல, நமக்கு பகவானால் கொடுக்கப்பட்ட ஜ்ஞான சக்தியைக் கொண்டு இவ்வுடலைப் போக்க, அதாவது மறுபடியும் இந்த பூமியில் பிறவாமலிருக்க முயலவேண்டும். இதைப்பெற ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களை சில சுலோகங்களில் சொல்லி, மேலே ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை விவரிக்கிறான் கண்ணன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top