பகவத் கீதை

नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्‍यया ।
शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ॥ ४३ ॥
நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா |
சக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா ||     11.53

அர்ஜுன! நீ என்னை எவ்வாறு கண்டாயோ அது போல, வேதம் ஓதுவதினாலும், தவத்தினாலும், யாகாதிகளினாலும், தானத்தினாலும், நான் காணக்கூடியவனல்லன். ஆனால் என்னிடம் செய்யும் அனன்ய பக்தியினால் மாத்திரமே, நான் உள்ளபடி அறிவதற்கும் காண்பதற்கும், அடைவதற்கும் தகுதியானவன்.

பகவானைப் பற்றி அறிவதற்கோ, அவனைக் காண்பதற்கோ, அவனை அடைவதற்கோ மற்றவைகளில் பற்று அற்று, அவன் ஒருவனிடமே செய்யும் பக்தியே (அன்பே) ஸாதனம். வேறு ஒன்றும் ஸாதனமாகாது என்று பக்தியின் மேன்மையை இந்த சுலோகத்தில் கூறுகிறான் கண்ணன்.

பக்தி உள்ளவனுக்கே வேதத்தின் உண்மைப் பொருள் விளங்கும். பகவானிடம் அன்பு இல்லாதவனுக்கு வேதம், தன் உண்மைப் பொருளை மறைக்கும் இயல்பானதைப் பற்றியே அதற்கு "மறை" என்று பெயர்.

வேதத்தை ஓதி அதன் உண்மைப் பொருளை அறிய வேண்டும். அப்போது பகவானை உள்ளபடி அறியலாம்; இப்படி அறிந்து வெகு காலம் அந்த பகவானை த்யானம் செய்தால் பக்தி உண்டாகும்; வெகு காலம் பகவத் பக்தியைச் செய்து வந்தால், அது பரபக்தி, பரஞானம், பரம பக்தியாக வளர்ந்து பக்குவம் அடைந்து பிறகே அந்த பரம்பொருளைக் காணவோ அடையவோ இயலும். "பக்தியேக கோசர” என்றும் இந்த சுலோகத்தில் கண்ணன் கூறியுள்ளான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top