கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

25. இனி ப்ரக்ருதத்திலே செல்லுவோம்; *ந த்வேவாஹம் ஜாது நாஸம்* என்கிற ச்லோகத்திலே ஜீவாத்ம பரமாத்ம பேதமும் ஜீவர்களுக்குப் பரஸ்பரபேதமு மாகிற விவை காட்டப்பட்டது போல அதற்கடுத்த (13) ச்லோகத்தில் "தேஹி நோஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா, ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ்தத்ர ந முஹ்யதி." என்பதில் ப்ரக்ருத்யாத்ம விவேகமும் காட்டப்பட்டது. அசேதநம் வேறு, சேதநன் வேறு என்கிற பகுத்துணர்வே ப்ரக்ருத்யாத்ம விவேக மெனப்படும். நிர்விசேஷ சிந்மாத்ரமான ப்ரஹ்மமொன்று தவிர வேறு சேதநா சேதநங்கள் உண்மையில் கிடையா என்கிற வாதம் இங்கு நிராகரிக்கப்பட்டதாகிறது. "அந்தவந்த இமே தேஹா:" "ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்," "வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய." இத்யாதிகளான ச்லோகங்களினால் ஆத்மா நித்யனென் றும், தேஹம் அநித்யமென்றும் பரக்கச் சொல்லுகிற முகத்தாலும் சேதநாசேதநங்களின் ஸத்பாவம் பாரமார்த்திகமாகவே மூதலிக்கப்பட்டதாகிறது. ஆக, கீதா சாஸ்த்ரம் விசிஷ்டாத்வைதிகளுக்கே நிதியானதென்றும் மற்றையோர்க்கு இது கொண்டு பணியில்லை யென்றும் சொல்லிற்றாயிற்று. இனி அத்யாயக்ரமேண சில விசேஷார்த்தங்களை விளக்குவோம்.

26. (2-27.) "ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச, தஸ்மாதபரிஹார்யேர்த்தே நத்வம் சோசிதுமர்ஹஸி" உத்பந்நனுக்கு மரணம் நிச்சயம்; மரணமடைந்தவனுக்கு புநர்ஜன்மம் நிச்சயம்; ஆகவே பரிஹாரமற்ற இவ்விஷயத்தில் நீ சோகிக்கக்கடவையல்லை-என்று இந்த ச்லோகத்தினால் சொல்லப் படுவதாகக் கொண்டு சிலர் சங்கிப்பதொன்றுண்டு. அதாவது, உத்பந்ந்னுக்கு மர ணம் நிச்சயம் என்பது நிராக்ஷேபமான விஷயந்தான்; ஆயினும் உடனே “த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச" என்றிருக்கிறதே, இது எப்படி பொருந்தும்? மரணமடைந்தவ னெல்லாம் மறுபடியும் பிறந்தே தீருகிறானென்று சொன்னால் அபுநராவ்ருத்தி லக்ஷணமான மோக்ஷம் இல்லையென்று தேறிவிடுமல்லவா? "த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந!" இத்யாதிகளான பல ச்லோகங்களாலே கீதையில் பலகால் சொல்லப்படுவதும், "மீட்சி யின்றி வைகுந்தமா நகர் மற்றதுகை யதுவே" இத்யாதிகளான பல பாசுரங்களும் பழுதாமே என்று சங்கிக்க நேர்கின்றது. இந்த சங்கை சிறிதும் யுக்த மன்று. 'ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு:' என்றதும் ஆத்மாவைப்பற்றினதன்று; 'த்ருவம் ஐந்ம ம்ருதஸ்ய ச' என்றதும் ஆத்மாவைப் பற்றினதன்று. ஆத்மாவுக்கு உத்பத்தி விநாசங்களிரண்டும் இல்லையென்று பலகால் சொல்லப்பட்டிருக்கிறது. (2-20) "ந ஜாயதே ம்ரியதே வா கதாசித் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:, அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே சரீரே." என்கிற ச்லோகத்தினால் ஜநநமரணாதிகளெல்லாம் அசேதநமான தேஹத்தின் தருமங்களே யொழிய நித்யனாய் அபரிணாமியாயிருக்கிற ஆத்மாவின் தருமங்களல்ல வென்று அறுதியிடப் பட்டிருக்கிறது. ஆகவே, 'ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு" என்றதும் அசேதநமான தேஹத்திற்கே; 'த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச' என்றதும் அதற்கே. ஆதலால் முன்சொன்ன சங்கைக்கு இடமில்லை.

27. “த்ருவம் ஐந்ம ம்ருதஸ்ய ச” என்றதில் மற்றொரு சங்கை தோன்றும். நஷ்டமாய்ப்போனது மறுபடியும் எப்படி உத்பத்தியை யடைய முடியும்? நம்முடைய சரீரமானது ச்மசானத்தில் கொளுத்தப்பட்டு நீறாகி யொழிகின்றது. அது மறுபடியும் உத்பத்தியடைகின்றதென்றால் இது எப்படி ஸம்பாவிதமாகும்? என்று சங்கிக்க நேரும். இதற்குச் சொல்லுகிறோம். உத்பத்தியாவது என்ன? விநாச மாவது என்ன? என்பதை முதலில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். புதிதாக ஒரு வஸ்து உண்டாவதும் கிடையாது, உள்ள வஸ்து அடியோடு நசித்துப்போவதும் கிடையாது. ஸத்தான த்ரவ்யத்திற்கு அவஸ்தா விசேஷங்களே உத்பத்தி விநாசங்களாகும். தேஹம் உண்டாயிற்றென்றால் என்ன? ப்ருதிவி அப்பு தேஜஸ்ஸு வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களின் அம்சங்கள் ஒன்று சேர்ந்து ஒருவிதமான அவஸ்தையை யடைந்த தென்றபடி. “மண்ணாய் நீ ரெரிகால் மஞ் சுலாவுமாகாசமுமாம் புண்ணாராக்கை” என்றும், "மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கிநின்ற அஞ்சு சேராக்கை" என்றும் திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடியே பாஞ்ச பௌதிக பிண்டமான தேஹம் புதிதாக ஆகாசத்தினின்றும் குதித்து விட்டதன்றே. ஸூக்ஷ்மாவஸ்தையை வீட்டு ஸ்தூலாவஸ்தையை பஜிப்பதுதான் உற்பத்தியாகும். மறுபடியும் ஸ்தூலாவஸ்தையை விட்டு ஸூக்ஷ்மா வஸ்தையை பஜிப்பதுதான் விநாசமாகும். வஸ்த்ரம் என்கிற ஒரு வஸ்துவை யெடுத்துக் கொள்வோம். நூல்முதலான சில த்ரவ்யங்கள் ஏற்கெனவே இருந்தவைகளே ரசநாவிசேஷத்தாலே வஸ்த்ரமென்னும் பெயரையடைகின் றன. இங்கு நூற்களின் சேர்க்கை தவிர வேறெரு த்ரவ்யம் உள்ளதா வென்று பார்க்கவேணும். பார்க்குமிடத்து வேறொரு த்ரவ்யம் காண்பரிது. "உத்பத்திவிநாசாதய: ஸதோ த்ரவ்யஸ்ய அவஸ்த்தாவிசேஷா:" என்கிற கீதாபாஷ்ய ஸ்ரீ ஸூக்தியை இங்கே அநுஸந்திப்பது. தென்மொழியால் 'உள்ளது, இல்லது' என்றும், வடமொழியால் 'ஸத், அஸத்' என்றும் வ்யவஹரிக்கப்படுவன-ஸ்தூலாவஸ்தையைப் பற்றவும் ஸூக்ஷ்மாவஸ்தையைப் பற்றவுமே யென்று உணர்க. வேதாந்திகளுக்கு ஸத்கார்ய வாதிகளென்று பெயர். "ஸதேவ நீயதே வ்யக்திம்" என்கிற ப்ரமாணத்தைத் திடமாகக் கொள்க.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top