22. கண்ணபிரான் அவதரித்ததும் பொய், தேஹபரிக்ரஹம் பண்ணினதும் பொய் என்று சொல்லும் பக்ஷத்தில் கீதாசாஸ்த்ரம் அவதரித்ததும் பொய்யென்றே சொன்னதாகத் தேறிவிடும். பொய்யான சாஸ்த்ரம் நம்முடைய உஜ்ஜீவனத்திற்கு எப்படி ஸாதனமாகும். வேங்கடாத்வரி இயற்றிய விச்வகுணாதர்சத்தில் வேதாந்தி வர்ணனத்தில் "த்ருச்யம் மித்த்யா த்ருஷ்டிகர்த்தா ச மித்த்யா தோஷோ மித்த்யேத் யேவ யா தீரமீஷாம், ஸாதிஷ்ட்டாநாம்சேபி கிம் நேதி சிந்தா ஸாதிஷ்ட்டாநாம் பண்டிதாநாமுதேதி." என்றொரு ச்லோகம் வெகு அற்புதமாகக் காண்கிறது. 'பார்க்கப்படுகிற பொருள்களெல்லாம் பொய், பார்க்கிறவனும் பொய். அவித்யை யாகிற தோஷமும் பொய் என்று கொள்ளுகிற இந்த மாயாவாதிகள், இவற்றுக்கு ஆச்ரய பூதமான ப்ரஹ்மமும் பொய்யென்று முடித்திருக்கலாமே; ஏன் அதை மாத்திரம் ஸத்யமென்று கொண்டார்களோ தெரியவில்லை'-என்பதே இந்த ச்லோகத்தின் கருத்து. பொய்யன் சொல்லுகிற வார்த்தைகளும் பொய்யாகு மாகையாலே தம்மைப் பொய்யரென்று நிலைநாட்டிக் கொள்ளுகின்ற இந்த மாயாவாதிகள் சொல்லுமதெல்லாம் பொய்யே என்பது இவர்கள் தம்மாலேயே ஸ்தாபிக்கப்பட்டுத் தீருவதனால் இவர்களைக் கண்டிக்க நாம் சிறிதும் ப்ரயாஸம் கொள்ளவேண்டியதில்லை யென்றும் ஒரு ரஸிக பண்டிதர் எழுதிவைத்திருக்கக் காண்கிறோம்.
23. கீதையின் இரண்டாமத்யாயத்தின் பன்னிரண்டாவது ச்லோகத்தி லிருந்தே சாஸ்த்ராரம்ப மென்று சொல்லலாம். அதற்குக் கீழுள்ள பாகங்களெல்லாம் அவதாரிகையாக நிற்கிறது. அந்த பன்னிரண்டாவது ச்லோகம் எவ்விதமாக வுள்ளதென்று பார்க்கவேணும். "ந த்வேவாஹம் ஜாது நாஸம் நத்வம் நேயே ஐநாதிபா:, ந சைவ ந பவிஷ்யாமஸ்ஸர்வே வயமத: பரம்” என்பதே அந்த ச்லோகம். இதன் பொருள் யாதெனில், ஸர்வேச்வரனாகிய நானும் இதற்கு முன்கழிந்த அநாதிகாலத்திலும் இருந்தவனே; அர்ஜுநா! நீயும் இந்த அரசர்களுமான க்ஷேத்ரஜ்ஞர்களுங்கூட முன்பும் இருந்தவர்களே. முன்பு இருந்தது மாத்திரமேயன்றிக்கே மேலுள்ள காலமு மெல்லாம் நானும் நீங்களும் இருக்கப்போகிறவர்களே என்பதாம். ஸர்வேச்வரனாய் பரமாத்மாவான நான் நித்யன் என்பதில் எப்படி ஸந்தேஹ மில்லையோ, அப்படியே ஷேத்ரஜ்ஞர்களாய் ஜீவாத்மாக்களான நீங்களும் நித்யர்களென்பதில் ஸந்தேஹமில்லையென்று பகவான் தானே சோதிவாய்திறந்து பணித் துளன். இதனால் ஸர்வேச்வரனான பகவானிற் காட்டிலும் ஜீவாத்மாக்களுக்குண்டான பேதமும், அந்த ஜீவாத்மாக்களுக்குப் பரஸ்பரமுண்டான பேதமும் பார மார்த்திகமென்று பகவான் தானே வ்யக்தமாகத் தெரிவித்ததாய்த் தேறுகிறது. இந்த ச்லோகம் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திற்கு அடிப்படையாக வுள்ளதென்று நன்குணரலாம். நமது பாஷ்யகாரர் இந்த ச்லோகத்திற்கு இட்டருளியிருக்கின்ற பாஷ்யம் மிகவும் விபுலமாக வுள்ளது.
24. கீழே அர்ஜுனன் (2-7.) “ப்ருச்சாமி த்வா தர்மஸம்மூடசேதா:, யச் ச்ரேயஸ்ஸ்யாத் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்." என்று, தத்வார்த்தம் தெரியாமையினாலே தான் தளும்பியிருப்பதாகவும் தன்னுடைய கலக்கம் தீர தத்வார்த்தத்தை அறுதியிட்டு அருளிச் செய்யவேணுமென் றும் சொல்லித் திருவடிகளில் விழுந்து யாசித்திருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு தத்வோபதேசம் செய்யவே இந்த கீதாசாஸ்த்ரம் அவதரித்தது. கீதாசார்யன், கலங்கினவனுக்குச் சொல்லும்போது தெளிவான பொருளைச் சொல்லுவனே யல்லது கலங்கின பொருளையே சொல்லமாட்டானன்றே. ஆகவே இந்த சாஸ்த்ரத்தில் கூறப்படும் பொருள்கள் யாவும் ஸர்வாத்மநா பாரமார்த்திக மென்றே வைதிகர்கள் கொள்ளக்கடவர்கள். அதிலும் ஆரம்ப ச்லோகமான விதனில் கூறப்படும் விஷயம் உபநிஷதாதிகளில் வடிக்கட்டின பொருளாகவே யிருக்கத்தகும். இதில் ஜீவாத்ம பரமாத்மபேதம் முதலியன தெரிவிக்கப்படுமவை அபாரமார்த்திகமாக இருக்கச் சிறிதும் ஒளசித்யமில்லை. ஆக இந்த நிரூபணங்களினால் ஸ்வாமி யெம்பெருமானார் உபநிஷத்து, ப்ரஹ்மஸூத்ரம், கீதை முதலானவற்றின் பொருள்களை ஆர்ஜவத்துடன் அறிந்து அறுதியிடுபவர் என்பது நிஷ்பக்ஷபாதர்களுக்குக் கையிலங்கு நெல்லிக்கனியாகும். இப்பெருமை பொலியவே யதிராஜஸப்ததியில் "யதாபூத ஸ்வார்த்தா யதிந்ருபதிஸுக்திர் விஜயதே” என்று பொருத்தமாகப் பேசப்பட்டது.