19.இங்கு சங்கராசார்யர் “ஸம்பவாமி- தேஹவாநிவ பவாமி, ஜாத இவ. ஆத்மமாயயா -ஆத்மநோ மாயயா, ந பரமார்த்தத: லோகவத்” என்று எழுதியுள்ளார். கானலானது தன்னிடத்தில் தண்ணீர் இல்லாமலிருக்கச் செய்தேயும் அது இருப்பதுபோல் காட்டுகிறதல்லவா ? அப்படியே பகவானும் தான் உண்மையில் தேஹபரிக்ரஹம் பண்ணாதவனாகையாலே தன்னிடத்தில் தேஹமில்லாதிருக்கச் செய்தேயும் இருப்பதுபோல் மாயையினால் காட்டிக் கொண்டு நிற்கிறான் என்பது சங்கராசார்யருடைய அபிப்ராயம். மாயா என்னுஞ் சொல்லுக்கு பொய்யென்பதே இவர் கொண்ட பொருளாகும். அந்த நாலாவது அத்யாயத்திலேயே மேல் ஒன்பதாவது ச்லோகத்தில் “ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:, த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந" என்பதில் பகவான் தானே தன்னுடைய அவதாரத்தையும் அவதார சேஷ்டிதத்தையும் ஸத்யமாக எவன் அறிகிறானோ அவன் வர்த்தமாந தேஹத்தை விட்டொழித்து மறுபிறவியடையாமல் தன்னையே யடைவதாகச் சொல்லியிருக்கின்றான். 'மே ஜந்ம கர்ம ச ய: தத்வத: வேத்தி' என்றிருப்பதை ஸ்வமதப்ரதிகூலமாக நினைத்த சங்கராசார்யர் வெகு சாதுர்யமாய் வேறுவிதமாக அந்வயம் காட்டியுள்ளார். தத்வத: என்பதை 'யோ வேத்தி' என்பதில் கூட்டாமல், தத்வத: தேஹம் த்யக்த்வா' என்று உத்தரார்தத்திலே அந்வயித்துப் பொருளுரைத்தார். அவர் இவ்வளவு ச்ரமம் எதற்காகப் படுகிறாரென்றால், 'ஸம்பவாமி ஆத்மமாயயா' என்றுள்ள விடத்தில் மாயா சப்தத்திற்குத் தாம் கொண்ட பொருளே பொருளென்கிற வொரு அபிநிவேசத்தினால் தான்.
20. ப்ராமாணிகர்கள் இங்கு மத்யஸ்த நிலையில் நின்று ஒன்று குறிக்கொள்ள வேண்டும். தைத்திரீய யஜுர் ப்ராஹ்மணத்தில் காடக ச்ருதியில் மூன்றாம் ப்ரச்நத்தில் "யாவந்த: பாங்ஸவோ பூமே: ஸங்க்யா தா தேவமாயயா" என்று ஓதப்பட்டிருக்கின்றது. பூமியிலுள்ள மண் துகள்களெல்லாம் தேவர்களின் மாயையினால் கணக்கிடப் பெற்றவையாக இதில் சொல்லப்படுகிறது. இங்கு மாயையென்பதற்கு பிறர் கூறும் பொருள் பொருந்தமாட்டாதென்பது வெளிப்படை. பூமியிலுள்ள மண் துகள்கள் மனிதர்களின் ஞானத்தினால் கணக்கிட முடியாதவையாயினும் தேவர்களின் ஞானத்தினால் கணக்கிடக்கூடியவையே யாதலால் இங்கு 'தேவமாயயா' என்றதற்கு “தேவர்களின் ஞானத்தாலே” என்பதுதான் பொருளென்று யாவரும் நிராக்ஷேபமாக இசையத்தக்கதாகும். வித்யாரண்யர் முதலான வேதபாஷ்யகாரர்களும் இப்படித்தான் இங்குப் பொருள் வரைந்துள்ளார்கள். ஆகவே (மாயா) என்பதற்கு 'மித்த்யா' என்று பொருள்கொள்வது பொருத்தமற்றதென்று தெளியக்கடவது.
21. அஸுரராக்ஷஸாதிகள் செய்கிற செயல்களை மாயை யென்று சொல்லுவதுண்டு. அங்கும் மித்த்யா என்கிற அர்த்தம் கிடையாது. ஆச்சர்யகரம் என்பது பற்றியே அங்கு மாயாசப்த ப்ரயோகம் பண்ணுவது. பிள்ளை லோகாசார்யர் தத்வத்ரயத்தில் அசித் ப்ரகரணத்தில் (10) “மாயையென்கிறது விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே” என்றருளிச் செய்தவிடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள் “அஸுரராக்ஷஸாதி க்ரியைகளை ஆச்சர்யகரத்வத்தைப் பற்ற மாயாசப்தத்தாலே சொல்லுகிறாப்போலே இத்தையும் (ப்ரக்ருதியையும்] மாயை யென்கிறது விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே. அதாவது, ஒன்றுபோலொன்றன்றிக்கே விஸ்மயநீயங்களான கார்யங்களை ஜனிப்பிக்கை" என்றருளிச் செய்ததும் இங்கே அநுஸந்தேயம். "தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா” (7-14) என்ற கீதா ச்லோகத்தின் பாஷ்யத்தில் ஸ்வாமி வெகு விசதமாக நிரூபித்தருளுகிறார். "அஸ்யா மாயாசப்தவாச்யத்வம் ஆஸுரராக்ஷஸாஸ்த்ராதீ நாமிவ விசித்ரகார்யகரத்வேந....அதோ மாயாசப்தோ ந மித்த்யார்த்தவாசீ. ஐந்த்ர ஜாலிகாதிஷ்வபி கேநசிந்மந்த்ரௌஷதா திநா மித்த்யார்த்த விஷயாயா: பாரமார்த்திக்யா ஏவ புத்தேருத்பாதகத்வேந மாயாவீதி ப்ரயோக:, ததா மந்த்ரௌ ஷதாதிரேவ ச தத்ர மாயா.” இத்யாதி திவ்யஸூக்திகள் அங்கு ஸேவிக்கத்தக்கவை. மாயாசப்தத்தின் உண்மைப் பொருளையுணராதே தவறான பொருளைக் கொண்டதன் பயனாகவே மாயாவாதிகளின் வாதங்கள் மிகமிக வளர்ந்துவிட்டன.