46. இனி எட்டாமத்யாயத்தில் ஒரு மஹாநிதி காட்டுவோம். ஸம்ஸாரிகளின் விஷயோபபோக ப்ரவ்ருத்தியானது நிஷித்த விஷயபோகமென்றும் விஹித விஷயபோகமென்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. சாஸ்த்ரங்களில் கர்ஹிக்கப் பட்ட பரதார போகமானது நிஷித்தவிஷய போகமாகவும், சாஸ்த்ர ஸம்மதமான ஸ்வதார போகமானது விஹித விஷய போகமாகவும் கூறப்படுகிறது. விஹித விஷயபோகமானது க்ருஹஸ்தாச்ரம தர்மமாகையாலே ப்ராப்தமென்று கொள்ளப் படுகிறது. ஆனால் அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரணத்வங்களோடு கூட அநந்ய போக்யத்வ மென்கிற விலக்ஷணமான தன்மையையும் பெற்றிருக்கின்ற விசேஷாதி காரிக்கு இந்த விஹித விஷயபோகம் அருவருக்கத்தக்கதாய் த்யாஜ்யமேயாகு மென்பது ஸத்ஸம்ப்ரதாய நிஷ்டர்களின் ஸித்தாந்தம். சாஸ்த்ரங்களில் ஸ்வதார போகம் நியமமாக விதிக்கப்பட்டு, அது தவிர்ந்தால் தோஷமும் பிரதிபாதிக்கப்பட்டிருக்கை யாலே விஹித விஷய நிவ்ருத்தி அசாஸ்த்ரீயமென்று பிறருடைய கொள்கை காண்கிறது. ஸ்ரீவசநபூஷணத்தில் இரண்டு மூன்றிடங்களில் உத்தமாதிகாரிக்கு விஹித விஷய நிவ்ருத்தியைத் தன்னேற்றமாக வருளிச் செய்கிறார் பிள்ளை லோகாசார்யர். அவ்விஷயம் கீதையில் (8-3) ச்லோகத்தின் பாஷ்யத்தில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்யப்படுகிறது. அதனை விவரிப்போமிங்கு-
கீழ் ஏழாவது அத்யாயத்தின் முடிவில் கண்ணபிரான் *ஐராமரண மோக்ஷாய என்கிற இருபத்தொன்பதாம் ச்லோகத்தில் "தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம்" என்று ஒரு வார்த்தை சொன்னான். அதுகேட்ட அர்ஜுநன் அந்த வார்த்தைக்கு உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டிக் கண்ணனையே கேள்வி கேட்கிறான் எட்டாம் அத்யாயத்தின் 1, 2-ச்லோகங்களினால். "கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம" என்று தொடங்கிக் கேள்விகள் உள்ளன. மூன்றாவது ச்லோகம் தொடங்கிக் கண்ணபிரானுடைய விடை வெளிவருகின்றது. கிம் கர்ம என்ற கேள்விக்குக் கண்ணனுடைய விடை “பூத பாவோத்பவகரோ விஸர்க்க: கர்மஸம்ஜ்ஞித:" என்பது. இங்கு விஷயமென்ன வென்றால், கேண்மின்.
47. சிலவற்றை அறியவேண்டும் என்று பகவான் நியமித்துவருகையில் கருமத்தை அறியவேண்டும் என்று சொல்லியிருந்ததனால் கருமமென்றால் எது ? என்று அர்ஜுநன் கேட்க நேர்ந்தது. அதற்கு பகவான் விடை கூறியுள்ளார். ஒருவன் ஒன்றை யறிவதானது, பற்றுவதற்காகவும் ஆகலாம், விடுவதற்காகவும் ஆகலாம். நல்லதா விருந்தால் பற்றுவது, கெட்டதாயிருந்தால் விடுவது. ஆகவே நல்லதையும் தெரிந்து கொள்ள வேண்டும், கெட்டதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே தெரிந்து கொள்ளவேண்டியதாகக் கூறப்பட்ட கருமம் நல்லதன்று. கெட்டது-என்பதாக பகவானுடைய விடையினால் தெரிகின்றது. *பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்ம ஸம்ஜ்ஞித:" என்பதற்கு நம்முடைய ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்திருக்கிற அர்த்தம் வருமாறு:- “பூதபாவ: - மநுஷ்யாதிபாவ:, ததுத்பவகரோ யோ விஸர்க:, 'பஞ்சம்யா மாஹுதாவாப: புருஷவசஸோ பவந்தீதி ச்ருதிஸித்தோ யோஷித்ஸம்பந்தஜ; ஸ: கர்மஸஞ்ஜ்ஞித; தச்சாகிலம் ஸாநுபந்தம் உத்வேஜநீயதயா பரிஹரணீயதயா ச முமுக்ஷு பி: ஜ்ஞாதவ்யம். பரிஹரணீயதா ச அநந்தரமேவ லக்ஷ்யதே "யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தீதி." என்பது கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி. இதன் கருத்தாவது- ஸ்த்ரீ புருஷஸம்யோக மென்பதுதான் இங்கே கருமமென்கிறது. இது மிகவும் அருவருக்கத் தக்கதாகையால் விடத் தக்கதாக இதனை யறியவேண்டும். இதை விடவேண்டுமென்பது மேலே பதினோராவது ச்லோகத்திலும் காட்டப்படுகிறது எனபதாம். இதனால் நாம் தெரிந்துகொள்வது க்ருஹஸ்தாச்ரம தருமமாக விஹித விஷயபோகம் ப்ராப்தமே யானாலும் அது விசிஷ்டாதிகாரிக்கு ஜுகுப்ஸநீயமே யென்று. ஆகவே இவ்விஷயத்தில் ஸ்ரீவசநபூஷண ஸித்தாந்தம் நிரவத்யமென் றுணர்க. இவ்விடத்தில் சங்கர பாஷ்யத்திலோ மத்வபாஷ்யத்திலோ இவ்வர்த்தம் காண ப்ரஸக்தியேயில்லை.
48. இனி ஒன்பதாமத்யாயத்தில் ஸாரமானதைச் சிறிது அனுபவிப்போம்- "பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்த்யு பஹ்ருதமச்நாமி ப்ரயதாத்மந:" (9-26.) என்கிற ச்லோகத்தினால் கண்ணபிரான் தான் ஆராதனைக் கெளியன் என்னுமிடத்தை வெகு அழகாக அருளிச் செய்கிறான் இதர தெய்வங்களிற்காட்டில் எம்பெருமான் எத்தனையோ விதங்களால் நெடுவாசி பெற்றிருப்பதுபோல இவ்வகையாலும் நெடுவாசி பெற்றிருக்கிறான். 'ஆடு பலி கொடு, கோழி பலி கொடு' என்று அருந்தேவைகளையிட்டு மஹாபரிச்ரம ஸாத்யங்களான ஆராதனைகளை அபேக்ஷித்திருக்கும் தேவதாந்தரங்கள். எம்பெருமான் படியோ அப்படியன்று. நாம் இட்டது கொண்டு திருப்தியடைவதே அவனது ஸ்வரூபம். எம்பெருமானுக்கு நாம் சில பொருள்களை ஸமர்ப்பிப்பதானது அவனுக்கு ஏற்கெனவே யில்லாததொரு பூர்த்தியை யுண்டாக்குவதற்காகவா ? நாம் ஸத்தை பெறுவதற்காகவா? என்று ஆராயவேண்டும். அவனோ அவாப்த ஸமஸ்தகாமன்; அன்னவன் குறையுற்றிருந்து நாமிட்டது கொண்டு பூர்த்தியடைகிறா னென்பது அஸம்பாவிதம். கடலிலே மேகம் வர்ஷிப்பது கடல் நிரம்புவதற்காக வன்றே. "வர்ஷபிந்தோரிவாப்தெள ஸம்பந்தாத் ஸ்வாத்மலாப:" என்று (ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்) பட்டர் அருளிச் செய்தபடியே மேகம் தான் ஸத்தை பெறுவதற்காகவே கடலிலும் வர்ஷிக்கின்ற தென்பது பரமார்த்தம். அது போலவே ஸ்வத: பரிபூர்ணனான பரமபுருஷன் திறத்தில் நாம் சில பொருள்களை ஸமர்ப்பிப்பது நமது ஸ்வரூபம் நிறம்பெறுவதற்கேயன்றி அவனை நிரப்புவதற்கன்று என்பது வெளிப்படை. ஆகவே நாம் சிறந்த பெரும் பொருள்களைத் தேடி யிடவேணு மென்பதில்லை. இடுகிற பொருள் எதுவாயினும் இடுவது ப்ரேம பூர்வமாக வேணுமென்பதொன்றிலேயே நியதியுள்ளது. திருமங்கையாழ்வார் ,
“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-" என்று பெரிய திருமொழியில் (11-7-6) அருளிச் செய்கிறார். திருத்துழாய் முதலிய எந்த வஸ்துவைக் கண்டாலும் “இது எம்பெருமானுக்குச் சாத்தத் தக்கது” என்று அத்யவஸாயங் கொள்ளாதாருடைய நெஞ்சை நெஞ்சாகக் கொள்ளமாட்டோம் [நஞ்சாகவே கொள்ளுவோம்] என்று உரைக்கின்ற இப்பாட்டில். எம்பெருமானுக்கே உரித்தான திருத்துழாயோடு விஜாதீய வஸ்துக்களும் கூட்டியெடுக்கப்பட்டிருத்தலால், எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேணு மென்கிற சுத்த பாவத்துடனே கொள்ளுகிற புஷ்பம் எதுவாயிருந்தாலும் குற்றமில்லை; *செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி* என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற புஷ்பங்களாகவே யிருக்கவேணு மென்கிற நியதியில்லை, ஏதேனுமொரு புஷ்பமாக இருக்கலா மென்பதும், பக்திப் பெருங்காதலே முக்கியமான தென்பதும் தோற்று விக்கப்பட்டன. “பத்ரம் புஷ்பம்" என்று மேலே யெடுத்த கீதா ச்லோகமும்-'இடுகிற பொருளில் வாசி பார்ப்பதில்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமுள்ளதா என்பதொன்றயே பார்ப்பேன், என்று ஸ்பஷ்டமாகக் காட்டுகின்றது. “யோ மே பக்த்யா ப்ரயச்சதி” என்று சொல்லிவைத்து உத்தரார்த்தத்திலும் “தத் பக்த்யுபஹ்ருதம்” என்று, மீண்டும் சொல்லியிருக்கிறதல்லவா ? தத் என்றாலே போதுமா யிருக்க 'பக்த்யுபஹ்ருதம்' என்றது அநாவச்யகமே யன்றோ? தாத்பர்யசந்த்ரிகையில் இஃது எடுத்துக்காட்டப்படுகிறது. "பக்த்யுபஹ்ருதமிதி புந: கீர்த்தநம் பகவதாதரணீயத்வே ஹேதுரயமேவேதி ஜ்ஞாபநார்த்தம் ததாச ஸ்வயமேவாஹ, அண்வப்யுபஹ்ருதம் பக்தை: மம போகாய கல்பதே, பூயோப்யபக்தோபஹ்ருதம் நமே போகாய ஜாயதே' இதி." என்று.