பகவத் கீதை

मत्‍कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः ।
निर्वैर: सर्वभूतेषु यः स मामेति पाण्डव ॥ ५५ ॥
மத்கர்மக்ருத் மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: |
நிர்வைர: ஸர்வபூதேஷு யஸ் ஸ மாமேதி பாண்டவ ||    11.55

பகவானை அடைவதற்கான உயர்ந்த படியை இந்த அத்யாயம் இறுதி சுலோகமான இதில் கண்ணன் வெகு தெளிவாகக் கூறுகிறான்.

அர்ஜுன ! எவன் தான் செய்யும் எல்லாச் செயல்களையும் எனக்கு ஆராதனமாக. (என் பிரீதிக்காக) செய்கிறானோ, எவன் என்னை அடைவதே தனக்கு உயர்ந்த பயனாக எண்ணியிருக்கிறானோ எவன் என் ஒருவனிடமே அன்பைச் (பக்தியை) செய்கிறானோ, யாவனொருவன் மற்ற எல்லாவற்றிலும் பற்றுதல் இல்லாமலும், எல்லா உயிர்களிடத்திலும் பகைமையற்று நன்மையைக் கோருகிறானோ, அவனே என்னை அடைகிறான்.

மத்கர்மக்ருத் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட அவரவர் வர்ண ஆச்ரமத்திற்குத் தகுந்த கருமங்களை "பகவத் பிரீத்யார்த்தம்' செய்பவன். இப்படிச் செய்பவன் ஒரு பலனையும் இச்சியான். தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் பரம பிரயோசனம் பகவானின் உகப்பே என்று இருப்பான்.

இப்படி இருந்து, அக்கருமங்களை பகவானிடம் அன்போடு செய்ய வேண்டும். அந்த அன்பு மிகுதியால் பகவானை துதித்தல், பூஜித்தல், வணங்குதல், முதலானவைகளையும் செய்திருப்பான். ஒரு நொடிப்பொழுது பகவானை நினையாவிடினும், உகந்து அவனுக்குத் தொண்டு செய்யாவிடினும் தரித்திருக்கமாட்டான்.

இப்படிப்பட்ட பரமபக்தி தலையெடுத்தவனின் புண்ய பாபமான வினைகள் முற்றிலும் அவனைவிட்டு விலகிவிடும். இவ் வினைகள் ஒழிந்தவாறே அவன் என்னை அடைகிறான். (மோக்ஷம் பெறுகிறான்). இந்த பரமாத்மானுபவம் அவனை விட்டு நீங்குவதில்லை; அதாவது மோக்ஷம் அடைந்தவனுக்கு (புநராவர்த்தி)யில்லை.

ஸ்ரீ ஆளவந்தாரின் கீதார்த்த ஸங்க்ரஹம்

एकादशे स्वयाथात्म्यसाक्षात्कारावलोकनम् ।
दत्तमुक्तं विदिप्राप्त्योर्भक्त्ये कोपायता तथा ॥ १५ ॥

ஏகாதசே ஸ்வயாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகனம் |
தத்த முக்தம் விதி ப்ராப்தயோ: பக்த்யேக உபாயதா ததா ||

பதினோராம் அத்யாயத்தில் தன்னுடைய உண்மையான ஸ்வபாவங்களை நேராகப் பார்ப்பதற்குக் காரணமாகிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பகவானை அறிவதற்கும் அடைவதற்கும் பக்தி ஒன்றே உபாயம் என்பதும் சொல்லப்பட்டது.

ஆளவந்தார் திருவடிகளே சரணம்!

பதினோராம் அத்யாயம்- விசுவரூப ஸந்தரிசனயோகம் முற்றிற்று.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top