பகவத் கீதை

अथ चित्‍तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय ॥ ९ ॥

அத சித்தம் ஸமாதாதும் ந சக்நோஷி மயி ஸ்த்திரம் |
அப்யாஸயோகேந ததோ மாம் இச்சாzzப்தும் தநஞ்ஜய ||        12.9

அர்ஜூன! அப்படி உன் மனத்தை நிலையாக என்னிடம் வைக்க உனக்கு சக்தியில்லையானால், என்னை தியானம் செய்ய பழகிக் கொண்டு அதனால் என்னையே அடைய விரும்புவாய்.

அப்யாஸ யோகேன: அப்யாஸம் என்றால் பழக்கம்; யோகம்: என்றால் தியானம் எனப்பொருள். அர்ஜூன! உன் மனத்தை நிலையாக என்னிடம் வைத்து பக்தி செய்ய நீ சக்தியற்றவனாக இருப்பாயாகில், என் ஸ்வரூப ரூபகுணங்களை அடிக்கடி தியானம் செய்ய பழகிக் கொள். இப்படி செய்து வந்தால், நாளடைவில் உன் மனம் என்னிடம் நிலைத்திருக்கும் நீ என்னை அடைவாய் என்கிறான் கண்ணன்.

தியானம் என்றால் மற்றொன்றையும் நினையாமல் ஒன்றையே எண்ணியிருப்பது. ஸம்ஸாரி சேதனரால் இது செய்வது அரிது. நின்றவா நில்லா நெஞ்சுடையவர்களாகையினால் உலக விஷயங்களிலேயே ஒன்றில் நிலைத்திராது இவர்களுடைய மனம்; அப்படியிருக்க, அவ்விஷயங்களை அறவே துறந்து பகவானையே நினைத்து எப்போதும் நிலைத்திருப்பது என்பது முடியாத செயல்.

ஆதலால், ஸம்ஸாரத்தில் ஆழ்ந்து கிடக்கும் சேதனன், உலக விஷயங்கள் மிகத் தாழ்ந்தவை, நிலைத்திராதவை, சுகம் போல் தோன்றினாலும் துக்கத்தையே கொடுக்கக்கூடியவை, நம் ஆத்ம நாசத்தையே செய்யும் என்று அடிக்கடி நினைக்க வேண்டும். ஈச்வரனோ எனில் அறப்பெரியோன், அழிவே இல்லாதவன், நமக்கு நன்மையையே எப்போதும் செய்பவன். நம்மைப் படைத்து, காத்து, ரக்ஷிப்பவன். அதற்கேற்ப அறிவு ஆற்றல் படைத்தவன் என்று இப்படி அடிக்கடி நினைத்திருக்க வேண்டும். இது இன்பகரமாயுமிருக்கும்.

இவ்வாறு ஆராய்ந்து பார்த்தால், நம் மனது தானே விஷயங்களை விட்டு பகவானைப் பற்றப் பாங்காயிருக்கும். தினமும் சிறிது காலமாவது பகவானையும் அவன் கல்யாண குணங்களையும் தியானம் செய்ய நாம் பழக்கி வந்தால், நாளடைவில் நம் மனம் பகவானையே நிலையாகப் பற்றி அவனிடம் அன்பை (பக்தியை)ச் செய்யும் இயல்புடையதாகும். பின்பு பிறவியில்லா மோக்ஷம் அடையலாம்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top