பகவத் கீதை

ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥ १३.१८ ॥

ஜ்யோதிஷாமபி தஜ் ஜ்யோதி: தமஸ பரம் உச்யதே |
ஜ்ஞானம் ஜ்ஞேயம் ஜ்ஞான கம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம் ||        13.18

இந்த ஜீவன் ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளியாகவும், ப்ரக்ருதி தத்வத்தை விட மேற்பட்டவனாயும் சொல்லப்பட்டிருக்கிறான். ஜ்ஞானமே வடிவானவன். ஜ்ஞானத்தை குணமாக உடையவன். கீழே சொல்லப்பட்ட அமாநித்வம் முதலான குணங்களால் அடையத்தக்கவன்; எல்லா உடல்களின் இருதயத்தில் அசைவில்லாமல் நிலைத்திருப்பவன்.

சூரியனோ, ஒரு தீபமோ பிரகாசமாக தானும் இருந்து மற்றவைகளையும் தன் ஒளியினால் பிரகாசப்படுத்துகிறது. அது போல ஜீவாத்மா தானும் ஜ்ஞான ஒளியாயிருந்து, அந்த தனது ஜ்ஞான ஒளியினால் மற்றவைகளையும் அறியச் செய்கிறது. ஆனால் நாம் உலதில் காணும் சூரியன், தீபம் போன்ற ஒளி இருளைப் போக்குமே ஒழிய, ஒரு பொருளை இன்னது என்று அறிவது ஜீவாத்மாவின் ஞான ஒளியினாலேயே. பார்வை யிழந்தவன் ஒன்றை தடவிப் பார்த்து தன் ஜ்ஞானத்தினால் அதை அறிகிறான். நாம் தூங்கும்போது, ஜீவனின் ஜ்ஞான ஒளி வெளியில் பிரகாசிப்பதில்லை. ஜ்ஞானம் உள்ளடங்கி, தன்னைத் தானே அநுபவித்துக் கொண்டிருக்கிறான், ஜீவாத்மானுபவம் சுகரூபமாயிருப்பதினால்,"நான் சுகமாகத் தூங்கினேன்'' என்று சொல்வதை நாம் காண்கிறோம். தூங்கும் சமயத்தில், தீபம் பிரகாஸித்துக் கொண்டிருந்தாலும், நாம் தீபத்தையோ மற்ற எந்தப் பொருளையுமோ அறிவதில்லை. ஆதலால் நாம் ஜீவனின் ஜ்ஞான ஒளியினாலேயே எந்தப் பொருளையும் அறிகிறோம்.

தமஸ: பரம் உச்யதே - தமஸ் என்றால் மூல ப்ரக்ருதி. மண்ணிலிருந்து குடம் உண்டாவது போல, மூல ப்ரக்ருதியின் ஓர் சிறிய பாகத்திலிருந்தே, எல்லா உலகமும் படைக்கப்படுகின்றன. இந்த தமஸ்ஸைக் காட்டிலும் வேறுபட்டவனாய் உயர்ந்தவனாயுள்ளவன் ஜீவாத்மா.

ஜ்ஞானம்,ஜ்ஞேயம், ஜ்ஞானகம்யம் -

ஜ்ஞானம் -- அறிவே வடிவாயுள்ளவன் ஜீவன். ஓர் உப்புக்கட்டி முழுமையும் உப்பாகவேயிருப்பது போலவும், ஓரு கற்கண்டு கட்டி பூறாவும் இனிப்பாயிருப்பது போலவும், ஜீவாத்மாவின் ஸ்வரூபம் முழுமையும் ஜ்ஞானமயமாயிருக்கும்.

ஜ்ஞேயம் - அறியப்படுபவன். ஞானத்தை (அறியும் தன்மையை) குணமாக உடையவனாகையினால் தன்னைத்தானே அறிபவனாயும் தன்னால் தானே அறியப்படுமவனாயும் இருப்பவன்.

ஜ்ஞான கம்யம் – அமானித்வம் முதலான குணங்களால் அடையப்படுபவன்.

ஸ்வஸ்ய ஹ்ருதி விஷ்டிதம் – உயிரின் உள்ளத்தில் நிலைத்திருப்பவன். இங்கே ஜீவனை ஒருமையில் சொல்லியிருப்பது, கீழே சொன்னது போல ஜீவ சமூகத்தையே குறிக்கும். இது ஜாத்யேக வசனம்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top