பகவத் கீதை

प्रकृतिं पुरुषं चैव विद्ध्‍यनादी उभावपि ।
विकारांश्च गुणांश्‍चैव विद्धि प्रकृतिसंभवान् ॥ १३.२० ॥

ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்தி அநாதி உபாவபி |
விகாராஞ்ச குணாச்சைவ வித்தி ப்ரக்ருதி ஸம்பவாந் ||        13.20

உடலுக்குக் காரணமான ப்ரக்ருதியும் அநாதி, ஜீவாத்மாவும் அநாதி என்பதை நீ அறிவாயாக. வெறுப்பு விருப்பம் முதலான குணங்களும் அமாநித்வம் முதலான நற்குணங்களும் இந்த ப்ரக்ருதியினால் உண்டாகின்றன என்பதை அறி.

ஒரு ஜீவனுக்கு ப்ரக்ருதியினாலான சரீரம் தொடர்ந்து வெகு காலமாக வந்து கொண்டேயிருக்கிறது; விருப்பம் வெறுப்பு முதலான அப குணங்களும், அமாநித்வம் போன்ற நற்குணங்களும், ப்ரக்ருதியினாலேயே உண்டாகின்றன. அக்குணங்களுக்கு சேர உடலைச் சேர்ந்த கர்மேந்த்ரியங்கள் ஐந்து, ஜ்ஞானேந்த்ரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய (பொறி புலன்கள் பதினொன்றிலும்) செயல்கள் செய்யப்படுகின்றன. இதுதான் கர்மா. கரும பலன்களை அனுபவிக்கிறவன் ஜீவன்.

கருமத்தைச் செய்வதற்கும், ஜீவனுக்கும், உடலின் தொடர்பு வேண்டும். அந்தக் கரும பலன்களை அனுபவிப்பதற்கும் ஜீவனுக்கு ஓர் உடல் இருந்தே ஆக வேண்டும். இப்படி எப்போதும் ஓர் உடலுடன் சேர்ந்தே இருக்கிறான் ஜீவன்.

கருமத்தைச் செய்வது உடலா, ஜீவாத்மாவா? ஜீவ சம்பந்தமில்லாத உடல் ஒரு செயலையும் செய்ய முடியாதே! தானே செய்யாத கர்ம பலனை ஜீவன் அனுபவிக்கவும் காரணமில்லையே ?

ஒரு செயல் உண்டாக ஜ்ஞாநாதி (அறிகிறான்) இச்சதி (விரும்புகிறான்), யததே (முயல்கிறான்) கரோதி (செய்கிறான்), புங்க்தே (சுவைக்கிறான்) என ஐந்து விதமான செயல்கள் பார்க்கப்படுகின்றன. ஒரு பொருளை அறிகிறவன் ஜீவன், அப்பொருள் வேண்டும் என்று இச்சிக்கிறவன் ஜீவன், அதைப் பெற முயற்சி செய்வதும், அதைப் பெறுவதுமான செயல் உடலைச் சேர்ந்தது, அதைப் பெற்று அனுபவிக்கிறவன் ஜீவன். இப்படி அறிவது விரும்புவது, அதைப் பெற்ற பிறகு அனுபவிப்பது இம்மூன்றும் ஜீவனைச் சேர்ந்தது; பகவானால் கொடுக்கப்பட்ட அறியும் சத்தியைக் கொண்டே சித்சக்தி, இவைகளை ஜீவன் செய்கிறான். சரீரம் பெற்ற ஜீவன் அதைப்பெற முயன்று பெறுகிறான்; அதைப் பெற்ற பிறகு அனுப விப்பது ஜீவனேயாம்.

ஆதலால் புலன்கள் செய்யும் செயல்களுக்கு ஜீவனே காரணமாகிறபடியால் அதன் பலனை அனுபவிப்பவனும் ஜீவனேயாகிறான்.

இப்படிச் சரீரம் பெற்ற ஜீவனுக்கு, செயலும், அதனால் உண்டாகும் இன்ப துன்பங்களும் ஒரு நாளும் போகாது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top