பகவத் கீதை

न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा ।
अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्‍वा ॥ १५.३ ॥

நரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ நச ஆதிர் நச ஸம்ப்ரதிஷ்டா |
அச்வத்தமேநம் ஸுவிரூட மூலம் அஸங்கசஸ்த்ரேண தருடேந சித்வா ||        15.3

இந்த ஸம்ஸாரமான மரத்தின் வடிவம் அதன் முடிவு, காரணம், அதன் ஆதாரம் பற்றி இவ்வுலகிலுள்ளவர் அறிகிறதில்லை. ஒன்றாகவும் பலவாகவும் முளைத்திருக்கும் வேர்களுடைய இம்மரத்தை உறுதியான விஷயப் பற்றுகள் இல்லாமை என்கிற கத்தியினால் வெட்டித் தள்ளவேண்டும்.

விஷயப்பற்று அற்றதினால் கிடைக்கக் கூடிய மறுபிறவியில்லா மோக்ஷத்தை நாடவேண்டும்; இவற்றுக்கு ஆதி காரணனான பரம புருஷனையே சரணம் பற்ற வேண்டும். எந்த பகவானால் இந்த விஷயப்பற்று உண்டாகிறதோ, அவனையே பற்றிக்கொண்டு, விஷயப்பற்றைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

சம்சாரமான மரத்திற்கு நான்முக ப்ரஹ்மா நைமித்திக காரணம். ஆகையால் சத்ய லோகத்தில் வேர் ஊன்றியிருக்கிறது எனச் சொல்லப்பட்டது; அங்கிருந்து கீழ்நோக்கி வந்து தேவ மனித உலகில், தேவ மனித பசு பக்ஷிகளாய், பல கிளைகளைக் கொண்டு, விஷயங்களாகவும், புண்ய பாப கர்மங்களாகவும் விழுதுகள் விட்டு பூமியில் ஊன்றி வேர் பற்றி, மறுபடியும் மேலே வளர்கிறது. இப்படி மேலும் கீழுமாகப் பல கிளைகள் உண்டாகின்றன.

இப்படிப்பட்ட மரத்தின் வடிவத்தையோ அது உண்டாகும் காரணத்தையோ, அதன் ஆதாரத்தையோ, அது எப்படி அழிவை அடைகிறது என்பதையோ இவ்வுலகில் உள்ளவர்கள் அறிவதில்லை. நான் மனிதன், இன்னாரின் புதல்வன், இவை என் சொத்து, நான் இவைகளை அனுபவிக்கிறேன் என்று அறிகிறார்களே ஒழிய, இந்த சரீரம் ப்ரக்ருதியினால் உண்டானது, ஸத்வ ரஜஸ் தமஸ்ஸான முக்குணங்களினால் ஜீவன் இதில் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறான். இதற்குத் காரணம் ஆத்மாவல்லாத சரீரத்தில், ஆத்ம புத்தியும், அஜ்ஞானமும்தான் என்பதை அவன் அறிகிறதில்லை. இத்தகைய அஜ்ஞானமும் விபரீதஜ்ஞானமுமே ஸம்ஸாரத்திற்கு ஆதாரம்.

இப்படி பல வேர்களினால் கட்டுண்டிருக்கும் ஸம்ஸாரமான மரத்தை, விஷயங்களில் ஆசையின்மையாகிற வைராக்கியம் என்கிற கத்தியினால் வெட்டித் தள்ளவேண்டும். "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்கிறார் நம்மாழ்வார். வெகு காலமாயுள்ள விஷயத்தின் ஆசை எப்படி விலகும்?

எந்த பகவானாலே, இந்த விஷயப்பற்று நமக்கு உண்டாக்கப் பட்டிருக்கிறதோ அந்த பரம புருஷனையே சரணம் பற்றினால், இந்த விஷயப்பற்று தானே விலகி விடும். இதை “தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யேப்ரபத்யந்தே மாயா மேதாம் தாந்திதே" என்று கண்ணன், 7ஆம் அத்.14ம் சுலோகத்தில் கூறியுள்ளான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top