பகவத் கீதை

उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥ १३.२३ ॥

உபத்ரஷ்டாநு மந்தா ச பர்த்தா போக்தா மஹேச்வர: |
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேஸ்மிந் புருஷ: பர: ||        13.23

இந்த தேகத்தில் மேலான புருஷனான ஜீவன் பார்த்துக் கொண்டிருப்பவன்; உடலைத் தாங்குகிறவன், சுக துக்கங்களை அனுபவிக்கிறவன். உடல், புலன்களுக்கு ஈச்வரன், பரமாத்மா என்றும் சொல்லப்படுபவன்.

கீழ் சில சுலோகங்கள் போல, இதிலும் கிருஷ்ணனாகிய பகவானைக் கூறுவது போலவே தோன்றும்; ஆனால் இங்கு ஜீவாத்மாவையே கூறுகிறான். பகவான் ஒவ்வொரு உடலிலும் இருந்து கொண்டு ஜீவனின் செயல்களைப் பார்த்துக்கொண்டு, அதில் உதாஸீனனாகயிருக்கிறான்.

உடலையும் ஜீவனையும் தரிப்பவனும் அந்த பகவானே. அவை செய்யும் செயலின் பலன்களெல்லாம் அந்த பகவானையே போய்ச் சேருகிறது. இவனே மஹேச்வரன் என்றும் பரமாத்மாவென்றும் சொல்லப்படுகிறான் என்று ஸ்வரஸமாகப் பொருள் இந்த சுலோகத்திற்குக் கூறலாம்.

ஆனால் இங்கு கண்ணன், உடல் மற்றும் அதிலிருக்கும் ஜீவன் இவைகளைப் பற்றியே சொல்லி வருகிறான். கீழ் சுலோகத்திலும் மேல் சுலோகத்திலும் உடல் உயிர் இவைகளைப் பற்றிச் சொல்லி, நடுவில் இந்த சுலோகத்தில் பகவானைப் பற்றிச் சொல்லுகிறான் என்று பொருள் கூறுவது பொருந்தாது. ஆதலால், 15 அத் 8 வது சுலோகத்தில் "சரீரம் யதி ஆப்நோதி ஈச்வர” என்று உடலையும் புலன்களையும் நியமனம் செய்யும் ஜீவனை ஈச்வரன் என்று சொல்லியிருப்பது போல், இங்கும் ஜீவனையே ஈச்வரபதத்தினால் கூறுகிறான்.

உபதிஷ்டா – புலன்கள் செய்யும் செயல்களை ஜீவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அநுமந்தாச அதில் உதாஸீனனாக இருப்பவனும் ஜீவனே; பர்த்தா உடலை தரிப்பவனும் ஜீவன். ஜீவனில்லை யென்றால் உடல் அழிந்து விடுகிறது. போக்தா புலன்கள் செய்யும் செயல்களின் பலனை அனுபவிப்பவன் ஜீவன்; உடல், புலன்கள், மனம், புத்தி, பிராணன் இவற்றை தரித்து நியமிக்கும் எஜமானன் ஜீவன். ஆகையினால் ஜீவனை ஈச்வரன் என்கிறான்.

கீதையில் சில இடங்களில் தன்னையும், ஜீவனையும் ஆத்மா என்று சொல்லியிருக்கிறான். அது போல உடலையும் மனத்தையும் கூட ஆத்மா என்கிற பதத்தினால் கூறியிருக்கிறான். இப்படி ஆத்மாவான உடலுக்கும் மனத்திற்கும் ஆத்மாவாய் ஜீவனிருப்பதினால் அவனை பரமாத்மா என்று இங்கு விவரிக்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top