கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

40. இந்த ச்லோகத்தில் "ததா ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம்" என்ற விடத்தில் ரஸ்யமும் ரஹஸ்யமுமான ஒரு விசேஷார்த்தமுண்டு. மேலே ஏழாமத்யாயத்தில் “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” (18) என்று கீதாசார்யன் தானே ஜ்ஞானிகளைத் தனக்கு ஆத்மாவாகச் சொல்லுகையாலே இங்கு "ஆத்மாநம் ஸ்ருஜாமி" என்றதற்கு ஞானிகளை அவதரிப்பிக்கிறேன் என்பதும் அந்தரங்கமான பொருளாகும். அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைமடிந்து நிற்குங் காலங்களில் பகவான் தான் வந்து அவதரிப்பதிற்காட்டிலும் ஞானிகள் அவதரிப்பதில் ப்ரயோஜநாதிசயமுண்டு. இராமாநுச நூற்றந்தாதியில் (41) மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா வுலகோர்களெல்லாம் அண்ணலி ராமானுசன் வந்து தோன் றிய வப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே* என்றுள்ள பாசுரம் இங்குப் பொருத்தமாக அநுஸந்திக்கத் தகும். அன்றியும் இந்த நான்காமத்யாயத்திலேயே மேல் (34) "தத்வித்தி ப்ரணி பாதேந பரிப்ரச்நேந ஸேவயா, உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்வ தர்சிந:." என்கிற ச்லோகத்தில் ஞானிகளின் உபதேசப் பெருமை நன்கு கூறப்பட் டிருக்கிறது. 'தத்வமாகிய நான் சொல்லுவதிற் காட்டிலும், தத்வமாகிய என்னை ஸாக்ஷாத்கரித்து தத்வதர்சிகளென்று பேர் பெற்ற ஞானிகள் உபதேசிப்பது மிகச் சிறந்திருக்கும், அவர்களை யடிபணிந்தும் பலகால் அநுவர்த்தித்துக் கேட்டும் தெரிந்துகொள்' என்று அந்த ச்லோகத்தில் சொல்லப்படுகிறது. அப்படி யுபதேசித்துத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஞானிகளை ஸமய விசேஷங்களில் நானே அவதரிக்கச் செய்கிறேன் என்கிறானிங்கு. தன்னுடைய அவதாரத்தைப் பற்றிச்சொல்ல ப்ராப்தமான இந்த ப்ரகரணத்தில் ஞானிகளின் அவதாரத்தைப்பற்றிச் சொல்வதற்கு என்ன ப்ரஸக்தி யென்று நினைக்கவேண்டா; *பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகிவந்து" என்கிற பெரியாழ்வார் திருமொழிப்படியும் “ஸாக்ஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும், மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாத் சாஸ்த்ரபாணிநா" என்கிற ப்ரமாணப்படியும் ஞானிகளின் அவதாரமும் பகவதவதார விசேஷமேயாகையாலே, *சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ?--தாமம் துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு முளவோ பெருமானுனக்கு" என்று நம்மாழ்வாரை நோக்கி ஒரு பரமபக்தர் பணித்த பாசுரமும் இங்கு அநுஸந்திக்கப் பொருந்தும். ப்ராஸங்கிகமான விது நிற்க.

41. இனி அவதார ப்ரயோஜநம் சொல்லுகிற (4-8) “பரித்ராணாய ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம், தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே." என்கிற ச்லோகத்தைப்பற்றி யாராய்வோம். *துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காண வந்து* என்றும் *நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்* என்றும் சொல்லுகிறபடியே கர்மவச்யர்களான ஸம்ஸாரிகளும் படாத கஷ்டங்களைப் பட்டு இந்நிலவுலகில் எம்பெருமான் வந்து அவதரிக்க வேணுமோ? ஸத்யஸங்கல்பனான தான் தன்னுடைய ஸங்கல்பசக்தியைக் கொண்டே எதுவும் செய்யலாமன்றோ? எத்தனை ஸாதுக்களை ரக்ஷிக்க வேணுமானாலும் எத்தனை துஷ்டர்களை சிக்ஷிக்க வேணுமானாலும் தன்னுடைய அவ்யாஹத சக்திகமான ஸங்கல்பத்தினாலே செய்து தலைக்கட்ட என்னதடை? ஸாதுபரித்ராணத்திற்காகவும் துஷ்க்ருத் விநாசத்திற்காகவும் தர்மஸ்தாபனத்திற்காகவும் அவ்வப்போதுகளில் நானே வந்து பிறக்கிறேனென்கிறானே, எதற்காகப் பிறக்கவேணும்? என்று பிரபலமான ஆக்ஷேபம் தோன்றக்கூடியதிங்கு. இதற்கு சங்கர பாஷ்யத்தில் யாதொரு பரிஹாரமும் கிடையாது. மத்வபாஷ்யத்தில் மூலத்திற்கு ஸம்பந்த மின்றிக்கே ஏதோ எழுதப் பட்டுள்ளது; அதாவது, “ந ஐந்மநைவ பரித்ராணாதி கார்யமிதி நியம: ; ததாபி ஸ்வபாவேந ச யதேஷ்ட சாரீ ...லோகவத் து லீலாகைவல்யம்......" எழுதப்பட்டிருக்கின்றது. 'பகவான் ஸாதுபரித்ராணாதிகளை அவதரித்தே செய்தாக என்று வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை; ஆனாலும் விளையாட்டாக அவதரிக்கிறான். ப்ரஹ்ம ஸூத்ந்தரத்திலும் 'லோகவத் து லீலா கைவல்யம்* என்று சொல்லப்பட்டிருக்கிறதன்றோ' என்பது மத்வ பாஷ்ய பங்க்தியின் பொருள். வந்து பிறக்கிறே னென்று மூலத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்க, அதற்குக் ஸாதுபரித்ராணாதிகளுக்காக நான் கண்டனம் செய்கிற முறையில் இந்த பாஷ்யம் அவதரித்திருக்கின்றது. *லோகவத் து லீலாகைவல்யம்* என்கிற ப்ரஹ்ம ஸூத்ரமானது பகவான் செய்கிற ஜகத்ஸ்ருஷ்டியைப்பற்றினதே யொழிய பகவதவதாரத்தைப்பற்றிய தன்றென்பது நிர்விவாதம். அதை இங்கெடுத்தெழுதுவது ஸுதராம் அப்ரஸக்தம். இது கிடக்கட்டும். நம் ஸ்வாமியின் பாஷ்யத்திலுள்ள இன்சுவைப் பொருள்களை யநுபவிப்போம். அந்தரதி கரண ஸ்ரீபாஷ்யத்தில் "அந்தஸ்தத்தர்மோபதேசாத்." (1-1-21) என்கிற ஸூத்ரத்தின் பாஷ்யத்தில் 'பரித்ராணாய ஸாதூநாம்' என்கிற இந்த ச்லோகத்தை ப்ரஸக்தாநு பிரஸக்தமாக வுதாஹரித்து "ஸாதவோஹி உபாஸகா:; தத்பரித்ராணமேவோத் தேச்யம். ஆநுஷங்கிகஸ்து துஷ்க்ருதாம் விநாச:. ஸங்கல்பமாத்ரேணாபி ததுப பத்தே" என்றருளிச் செய்யப்பட்டிருக்கிறது. ஸாதுபரித்ராணத்திற்காகவே முக்கியமாக அவதாரம் செய்தருளிற்றென்றும், துஷ்டநிரஸநமானது ஸங்கல்பத்தாலுங் கூட ஸாத்யமாகக் கூடியதாதலால் அவதாரத்திற்கு அது ப்ரதாநோத்தேச்யமன்று என்றும் மேலெடுத்த ஸ்ரீபாஷ்ய ஸ்ரீஸூக்தியினால் தெரிவிக்கப்படுகிறது. ஸாது பரித்ராணம் மாத்திரம் என் ஸங்கல்பத்தினாலாகக் கூடாது? "ஸாதவ:பரித்ராதா பவந்து” என்று ஸங்கல்பித்தால் ஆகமாட்டாதோ? என்று ஆக்ஷேபமுதிக்கக்கூடும். இதற்குப் பரிஹாரம் கீதாபாஷ்யத்தில் நன்கு உள்ளது. அதை விவரிக்கிறோம்.

42. 'ஸாதூநாம் பரித்ராணாய' என்றதில் ஸாதுக்களாவார் இன்னாரென்தை விவரிக்கிற முகத்தால் அவர்களுடைய பரித்ராணம் ஸங்கல்பஸாத்யமாகாதென்றும் கண்காண வந்து தோன்றியே செய்யத்தக்கதாமென்றும் தெளிவித்ருளுகிறார் ஸ்வாமி. "ஸாதவ: உக்தலக்ஷணதர்மசீலா: வைஷ்ணவாக்ரேஸரா: மத்ஸமாச்ரயணே ப்ரவ்ருத்தா: மந்நாமகர்மஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசரதயா மத்தர்சநாத் விநா ஸ்வாத்மதாரணபோஷணாதிக மலபமாநா: க்ஷணமாத்ரகாலம் கல்பஸஹஸ்ரம் மந்வா நா: ப்ரசிதிலஸர்வகாத்ரா பவேயுரிதி மத்ஸ்வரூபசேஷ்டிதாவ லோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய” என்பன ஸ்ரீகீதாபாஷ்ய ஸ்ரீஸூக்திகள். இப்பங்க்திகளின் காம்பீர்யம் வாசாமகோசரம். ஸ்ரீவைஷ்ணவாக்ரேஸரர்களான நம்மாழ்வார் போன்ற பரம பக்தர்களையே திருவுள்ளத்திற்கொண்டு இப்பங்கதிகள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன. *எங்கே காண்கேன் ஈன்துழாயம்மான் தன்னை யானென்றென்று* என்றும் *காணவாரா யென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து' என்றும் 'கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாரா யொரு நாள்' என்றும் *தாமரை நீள் வாசத்தடம்போல் வருவானே ! ஒரு நாள் காண வாராயே* என்றும் கதறுகின்றவர்களாய் *ஒரு பகலாயிர மூழியாலோ* என்றும் *தெய்வங்காளென் செய்கேன் ஓரிரவு ஏழூழியாய்* என்றும் *ஊழியில் பெரிதால் நாழிகையென்னும்* என்றும் ஒரு நொடிப் பொழுதை கல்பஸஹஸ்ரமாக நினைப்பவர்களாய், *காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலு மெழா மயிர் கூச்சுமறா* என்றும், *காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்* என்றும் *உள்ளெலா முருகிக் குரல்தழுத் தொழிந்து உடம்பெலாம் கண்ணநீர் சோர* என்றும் ஸர்வாவயவ சைதில்யமுடையவர்களா யிருப்பவர்கள் ஆழ்வார்களைத் தவிர்த்து வேறு யாருமிலரே. அவர்களின் ஸ்ரீஸூக்திகளையேயன்றோ ஸ்வாமி ஸம்ஸ்க்ருதத்தில், மொழிபெயர்த்திருக்கிறார். அவர்கள் தன்னைக் காணவேணுமென்றும் தன்னோடு பேசவேணு மென்றும் தன்னைத் தழுவவேணு மென்றும் காதலித்தால் எம்பெருமான் நேராக வந்தாலொழிய அவர்களின் காதல் நிறைவேறாதன்றோ. ஸங்கல்பம் இங்கு என்ன பண்ணக்கூடும்? *மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக மலருலகில், தொழும் பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே* (3—19) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையே ஸ்வாமி நிதியாகக் கொண்டு பாஷ்யம் செய்தருளி யிருக்கிறார். ஆக 'பரித்ராணாய ஸாதூநாம்' என்ற விடத்தில் ஸாது சப்த விவக்ஷிதர்கள் ஆழ்வார்கள் போன்றவர்களென்றும், அவர்கள் எம்பெருமானை நேரில் கண்டாலல்லது தீராத காதலை யுடையவர்களாகையாலே அவர்களுக்காக வந்து தோன்றியே யாகவேணுமென்றும், அவர்களுடைய காதல் ஸங்கல்பத்தினால் ஒருகாலும் தீர்க்க முடியாதென்றும் காட்டி சங்காபரிஹாரம் நன்கு செய்தருளினாராயிற்று. இனி ஐந்தாமத்யாயத்திற் செல்வோம்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top