பகவத் கீதை

ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥ २०॥

யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ச்ரத்ததாநா: மத்பரமா: பக்தாஸ்தேzதீவ மே ப்ரியா: ||        12.20

யார் தர்மத்தை விட்டு விலகாத அம்ருதம் போன்ற இந்த பக்தி யோகத்தினால், கீழே கூறியபடி என்னை அடைவதே சிறந்த பயனாகக் கொண்டு, சிரத்தையுடன் என்னையே உபாசிக்கிறார்களோ (என்னிடம் பக்தி செய்கிறார்களோ) அந்த பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

பகவானிடம் பக்தி (அன்பு) செய்வதே சிறந்த பலன். இது இன்பகரமாய் அம்ருதம் போல போக்யமாயிருக்கும். பக்தியை ஊக்கத்துடன் செய்து பகவானை அடைந்த பின்பும் அந்த பக்தானுபவம் ஆனந்தமாயும் போக்யமாயுமிருக்கும் இப்படிப்பட்ட பகவத் பக்தியைச் செய்கிறவன் எனக்கு மிகவும் பிரியமானவன். அவனை நான் மிகவும் உவக்கிறேன் என்று சொல்லி, இந்த அத்யாயத்தை முடித்துக் கொள்கிறான் கண்ணன்.

ஆக, இப்பன்னிரெண்டாம் அத்தியாயத்தில் கண்ணன், முதல் ஷட்கத்தில் சொல்லப்பட்ட கர்மயோகத்தையும், பதினோராம் அத்யாயத்தில் சொல்லப்பட்ட பக்தி யோகத்தையும் ஒரு விதமாக இணைத்து, தொகுத்துச் சொல்லி, இந்த இரண்டாம் ஷட்கத்தை பூர்த்தி செய்திருக்கிறான்.

முதல் பத்து சுலோகங்களில், கர்மயோகம், ஜ்ஞான யோகம் இவைகளைக் காட்டிலும், பக்தியோகமே சிறந்தது; முமுக்ஷ அடையக்கூடிய மேலான மோக்ஷ பலத்தை, சுலபமாகவும், விரைவிலும் கொடுக்கக்கூடியது இந்த பக்தி யோகம் என்று கூறினான்.

இப்படிப்பட்ட பக்தி யோகத்தைச் செய்ய சக்தியற்றவர், பகவத் தியானத்தில் அப்பஸம் (பழக்கம் செய்யட்டும் என்றும், இதையும் செய்ய முடியாதவன் பகவத் கைங்கர்யத்தில் (தொண்டுகளில்) ஈடுபட்டிருக்கட்டும் என்றும் இதையும் செய்ய முடியாதவன் இரண்டு மூன்றாம் அத்யாயத்தில் சொல்லப்பட்ட கர்ம யோகத்தைச் செய்து, படிப்படியாக ஆத்ம சிந்தனம், ஆத்ம தரிசனம் பெற்று, பிறகு பகவத் தியானம் செய்யப்பழகி, பகவத் பக்தி செய்து, நல்வீடு பெறுவார்கள் என்பதையும் சொல்லி, முடிவில் தன் பக்தர்களின் ஸ்வரூப, ஸ்வபாவங்களையும் கூறி, அவர்கள் தனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொல்லி முடித்தான்.

இனி மூன்றாம் ஷட்கத்தில் கீழ் ஒன்று இரண்டு ஷட்கத்தில் சொன்னவைகளையே சர்ச்சை செய்து விமர்சிக்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top